
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்கள்
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் 1.53 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.415.13 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த ஓராண்டுகளாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வாயிலாக சிகிச்சைகள் மற்றும் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் இதுவரை ரூ.1.44 கோடி குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். காப்பீட்டுத் திட்டத்துக்குள் 656 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனைகளில் 1.53 லட்சம் நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு முழுமையான நலம் பெற்றுள்ளனர். சிகிச்சை செய்த மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.415.43 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பாராட்டு-பரிசு:
இந்தத் திட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி, அறுவைச் சிகிச்சைகள் செய்து கொண்டு நோய் குணம் அடைந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் பரிசுகளை வெள்ளிக்கிழமை வழங்கினார் முதல்வர் கருணாநிதி. இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
சென்னை அரசு பொது மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, சென்னை பில்ராத் மருத்துவமனை, பெங்களூர் நாராயண இருதாலயா, கோவை கங்கா மருத்துவ மையம், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித்துறைச் செயலாளர் கே.சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக