உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 27 லட்சம் பேர் மனு: நரேஷ் குப்தா


   
            தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க 27.3 லட்சம் பேர் மனு செய்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.  
 
இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:  
 
           நிகழாண்டில் ஜனவரி 1-ம் தேதியுடன் 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதில் திருத்தங்களை மேற்கொள்ளவோ அல்லது பெயர்களைச் சேர்க்கவோ ஜூலை 16-ம் தேதி இறுதி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 
 
            இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று காலக்கெடு ஜூலை 26 என நிர்ணயிக்கப்பட்டது. ஜூலை 16-ம் தேதி வரையில், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க தமிழகம் முழுவதும் இருந்து 27 லட்சத்து 30 ஆயிரத்து 192 பேர் மனு செய்துள்ளனர்.  மதுரையில் அதிகம்: மாவட்ட வாரியாக பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கல் பணிகள் நடைபெறுகின்றன. மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 2.22 லட்சம் பேர் தங்களது பெயர்களைச் சேர்க்க மனு செய்துள்ளனர்.
 
                 இந்த மாவட்டத்தைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் 2.1 லட்சம் பேரும், சென்னையில் 1.75 லட்சம் பேரும், திருவள்ளூரில் 1.5 லட்சம் பேரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்க்க மனு செய்திருக்கின்றனர். பெயர்களைச் சேர்க்க விண்ணப்பித்த அனைத்து மனுக்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இதன்பின்பு, களஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நீக்கப்பட்ட மனுக்கள் குறித்த விவரங்கள் தனியாக தொகுக்கப்படும்.
 
 சட்ட மேலவை தொகுதிகள்: 
 
               சட்ட மேலவைக்கு பட்டதாரிகள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகுதிகள் அமைக்கப்பட வேண்டும். பட்டதாரிகளின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் கடந்த 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன.  
 
                அதன்படி, தோராயமாக ஆசிரியர்கள் 3.6 லட்சம் பேரும், பட்டதாரிகளாக 13 லட்சத்துக்கும் மேலாக இருப்பார்கள். தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஓரிரு நாளில் இதுகுறித்த விவரங்கள் தொகுக்கப்பட்டு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார் நரேஷ் குப்தா.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior