உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

என்எல்சி பங்குகள் விற்பனையை கைவிடவேண்டும் - எச்எம்எஸ்

நெய்வேலி:
 
            என்எல்சி நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை எடுத்துள்ள நடவடிக்கையை கைவிட வேண்டும் என நெய்வேலி எச்எம்எஸ் தொழிற்சங்கத் தலைவர் சி.சுகுமார் வலியுறுத்தியுள்ளார்.
 
இதுதொடர்பாக சி.சுகுமார் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 
 
            தமிழகத்தில் இருக்கின்ற மிகப்பெரிய மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் தமிழகத்தின் மின் தேவை மற்றும் தென் மாநிலங்களின் மின் தேவையிலும் பெரும் பங்கு வகிக்கிறது. தொழிலாளர்களின் ஈடு இணையற்ற ஒற்றுமை, முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும் தற்போது நிறுவனம் அதிக லாபம் ஈட்டி மத்திய அரசுக்கு பங்கு ஈவுத்தொகையையும் அளித்து வருகிறது.
 
           அதோடு மட்டுமல்லாமல் தற்போது நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் பல்வேறு இடங்களில் மின் நிலையங்களையும், சுரங்கங்களையும் அமைத்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு என்எல்சி உள்ளிட்ட 10 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு எந்த நோக்கத்திற்காக பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினாரோ அந்த நோக்கங்களை குழிதோண்டி புதைக்கின்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது மத்திய அரசு.
 
          ஏற்கெனவே மத்தியில் இருந்த பாஜக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டபோது தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பினால் அதை கைவிட்டது. அதையடுத்து வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் முந்தைய அரசு செய்த அதே தவறை மீண்டும் செய்தது. இதையடுத்து தொழிலாளர்களின் உணர்ச்சிபூர்வமான எதிர்ப்பைக் கண்ட தமிழக முதல்வர் மு.கருணாநிதி அப்போது மத்திய அரசுக்கு விடுத்த மிரட்டலை அடுத்து அப்போதைக்கு என்எல்சி பங்கு விற்பனையை ஒத்திவைப்பதாகக் கூறியது மத்திய அரசு.
 
                 இப்போது மீண்டும் அத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய அரசு மேற்கொண்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை நடவடிக்கையை ஒட்டு மொத்தமாக கைவிட வேண்டும்.இல்லையேல் கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்ற மிகப் பெரிய போராட்ட நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் இறங்க நேரிடும் என சுகுமார் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior