
நெல்லிக்குப்பம் :
அரசு போக்குவரத்துக் கழக பஸ்சின் படிக்கட்டு உடைந்து சாலையில் தேய்த்துக் கொண்டு வந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.
கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி நேற்று முன்தினம் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. காராமணிக்குப்பம் அருகே சென்ற போது பஸ்சின் பின்பக்க கீழ் படிக்கட்டு உடைந்து சாலையில் தேய்த்துக் கொண்டு சென்றது. இதனால் தீப்பொறி ஏற்பட்டதால் சாலையோரத்தில் நடந்து சென்றவர்கள் பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.
டிரைவர் கண்டு கொள்ளாமல் 2 கி.மீ., தூரம் ஓட்டிச் சென்று நெல்லிக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் நிறுத்தத்தில் நிறுத்தினார். தொங்கி கொண்டிருந்த படிக்கட்டை பயணிகள் உடைத்து எடுத்தனர். கீழ்படி இல்லாத நிலையில் மீண்டும் பஸ் பண்ருட்டி நோக்கிச் சென்றது. இதனால் பயணிகள் பஸ்சில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் சிரமப்பட்டனர். கூட்டம் அதிகமாக இருந்து படிக்கட்டில் நின்று பயணம்செய்திருந்தால் அவர்களின் கதி என்ன ஆகியிருக்கும். தீப்பொறி டீசல் டேங்கில் பட்டிருந்தால் பெரியளவில் அசம்பாவிதம் நடந்திருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக