விநாயகர் சதுர்த்திக்காக கடலூரில் தயாராகும் சிலைகள்.
கடலூர்:
விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 13-ம் தேதி வர இருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்குத் தேவையான விநாயகர் சிலைகளை, கடலூரில் இப்போதே தயாரிக்கத் தொடங்கி விட்டனர்.
கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் பொம்மை தயாரிக்கும் தொழிலில் பலர் ஈடுபட்டு உள்ளனர். காகிதக்கூழ், பிளாஸ்டர் ஆப்பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு மூலப் பொருள்களைக் கொண்டு அவர்கள் பொம்மை தயாரித்து வருகிறார்கள். கடலூரில் தயாராகும் பொம்மைகள் தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் சிறுசிறு குழுக்களாக அவர்கள் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
ஆனால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய குழுக்களாகச் சேர்ந்து, கடந்த வாரம் முதல் விநாயகர் சிலைகளைத் தயாரிக்கத் தொடங்கி விட்டனர். கடலூரில் 3 குழுக்கள் தற்போது விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளன.இவர்கள் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை தயாரிக்கிறார்கள்.
கடலூர் செல்லங்குப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம், விநாயகர் சிலைகளை தயாரித்து வரும் கலியமூர்த்தி கூறியது:
நாங்கள் வண்டிப்பாளையத்தில் பொம்மை தயாரிக்கும் தொழில் செய்பவர்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தனிக் குழுக்களாகப் பிரிந்து வந்து கடலூரில் 3 இடங்களில் விநாயகர் சிலைகளைச் செய்துவருகிறோம். எங்களது குழுவினர் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை தயாரிக்கிறோம். அதன் விலை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,500 வரை இருக்கும். எங்கள் குழுவினர் மட்டும் விநாயகர் சதுர்த்திக்கு முன், 300 சிலைகளை உருவாக்கி விடுவோம்.
கடலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்து பலர் வாங்கிச் செல்வார்கள்.கடலூர் அருகே மணவெளியைச் சேர்ந்த நாங்கள், கடந்த 8 ஆண்டுகளாக விநாயகர் சிலைகள் உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக