கடலூர் :
கடலூர் நகர மன்ற கூட்டத்தில் ஒட்டுமொத்த கவுன்சிலர்களின் எதிர்ப்பால் குடிநீர் கட்டண உயர்வு தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.
கடலூர் நகர மன்ற கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தாமரைச்செல்வன், கமிஷனர் குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
குமார் (அ.தி.மு.க.,):
குடிநீர் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தி மன்ற அனுமதிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனை ஒத்தி வைக்க வேண்டும். பெரும் பாலான பகுதிகளில் குடிநீர் சரியாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் சாக்கடை நீர் கலந்து சுகாதாரமற்ற முறையில் வருகிறது. அதனை நிவர்த்தி செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்த பின் கட்டணத்தை உயர்த்தலாம். அதுவரை இந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும். இதே கருத்தை அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தியதால், குடிநீர் கட்டண உயர்வு தீர்மானம் ஒத்தி வைப்பதாக சேர்மன் அறிவித்தார்.
கந்தன் (அ.தி.மு.க.,):
குடியிருப்பு பகுதிகளில் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தது போல் அதே வேகத்தில் ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் செய்ய வேண்டும்.
குமார் (அ.தி.மு.க.,):
முதுநகர் மாலுமியார்பேட்டையில் உள்ள சத்துணவு கூடம் இடிந்து விழுந்து வருகிறது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
ராஜா (தி.மு.க.,):
திருப்பாதிரிப்புலியூர் எரிவாயு தகன மேடையை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
ராதகிருஷ்ணன் (பா.ம.க.,):
கொசுத் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாய் துன்னிசா (தி.மு.க.,):
கால்வாய் பணியை செய்யும் கான்ட்ராக்டர்களை வீட்டு குடிநீர் இணைப்புகள் உடைந்து விட்டால் அதனை சரி செய்ய வீட்டு உரிமையாளர்களிடம் பணம் வசூலிக்கின்றனர். அதனை கான்ட் ராக்டர்களே சரி செய்து கொடுக்க வேண்டும்
துணைத் தலைவர் தாமரைச்செல்வன்:
பாதாள சாக்கடை பணியைத் தொடர்ந்து நெல்லிக் குப்பம் சாலை போடப்பட்டது போல் பிற பகுதிகளிலும் சாலை போட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் பணிகள் விரைந்து முடியும். குடிசைப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் செய்பவர்கள் வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதில்லை.
இறுதியாக மன்ற விவாதத் திற்கு கொண்டு வந்த 29 தீர்மானங்களில் குடிநீர் வரி உயர்வைத் தவிர்த்து பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக