உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

2.47 கோடியில் கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டம் '

கடலூர்:

               கடலூர் ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டத்தில், ரயில்வே இலாகா தரப்பில் கட்ட வேண்டிய பகுதிக்கு டெண்டர் விடப்பட்டு இருப்பதாக, கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

           கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடித் திறப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை. இந்நிலையில் சுரங்கப்பாதைத் திட்டத்தில் ரயில்வே இலாகா மேற்கொள்ள வேண்டிய பகுதிக்கு, டெண்டர் விடப்பட்டு இருப்பதாக மக்களவை உறுப்பினர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். 

கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி  மேலும் கூறியது: 

               ரயில்வே இலாகா சார்பில் நிறைவேற்றவேண்டிய பாலம் |2.47 கோடியில் கட்டப்பட இருக்கிறது. இதற்கான டெண்டர் செப்டம்பர் 8-ம் தேதி பிரிக்கப்பட்டு ஒப்பந்ததாரர் நியமிக்கப்படுவார். ரயில்வே இலாகா தரப்பில் கட்டப்படும் பகுதி, 2.75 மீட்டர் உயரமும், 8.5 மீட்டர் அகலமும் கொண்டதாகவும் இருக்கும். இருவழி போக்குவரத்து வசதி கொண்டதாக அமையும் இச்சுரங்கப் பாதை, முன்னரே தயாரிக்கப்பட்ட கான்கிரீட் அமைப்பாக இருக்கும். அதைக் கொண்டு வந்து பொருத்தி 6 மாதங்களுக்குள் கட்டுமானப் பணி முடிவடையும். சுரங்கப்பாதை திட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறைதான் இன்னமும் முடிவு செய்யாமல் காலம் கடத்திக் கொண்டு இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை கடலூர் சுரங்கப்பாதைத் திட்டத்துக்கு விரைவில் டெண்டர் விடும் என்று எதிர்பார்க்கிறேன்.

           சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிற்பதற்கு ரயில்வே இலாகா ஒப்புதல் அளித்து இருக்கிறது. விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை, கடலூர் திருப்பாப்புலியூரில் இருந்து விருத்தாசலம் வழியாக இயக்கவும், ரயில்வே இலாகா ஒப்புக் கொண்டு இருக்கிறது என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டத்தில், மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்ட வேண்டிய பகுதிக்கு, தலைமைப் பொறியாளர் அனுமதி அளித்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அண்மையில் தெரிவித்தார். |7.6 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.

             ரயில்வே சுரங்கப்பாதை தொடர்பாக கடலூர் அனைத்து பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நிஜாமுதீன் தலைமையில் சனிக்கிழமை மாலை நடந்தது. சுரங்கப் பாதைக்கு ரயில்வே தரப்பில் மேற்கொள்ள வேண்டிய பணிக்கு டெண்டர் விடப்பட்டதற்கு தென்னக ரயில்வேக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சுரங்கப்பதைத் திட்டத்துக்கு எதிராக சில சுயநல சக்திகள் செயல்பட்டு வருகின்றன. வரும் 15-ம் தேதிக்குள் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விடாவிட்டல் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பொதுநல அமைப்புகளின பிரதிநிதிகள் வெண்புறா குமார், ரமேஷ், மணிவண்ணன், அருள்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior