தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்க உருவாக்கப்பட்ட மென்பொருளை இந்தியா முழுவதும் பயன்படுத்தும் வகையில் நபார்டு தலைவர் யு.சி.
சென்னை:
அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளும் வரும் மார்ச் மாதத்துக்குள் கணினிமயமாக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்க உருவாக்கப்பட்ட மென்பொருளை இந்தியா முழுவதும் பயன்படுத்தும் வகையில் நபார்டு வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்தது. கனிணி மென்பொருளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி. மணி, நபார்டு தலைவர் யு.சி. சாரங்கியிடம் ஒப்படைத்தார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் கூறியது:
கூட்டுறவு வங்கிகளை நவீனமயமாக்கி, அதன் செயல் திறனை அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வணிக வங்கிகளுடன் சம நிலையில் போட்டியிடவும், மத்திய, நகர கூட்டுறவு வங்கிகளையும் கணினிமயமாக்க வேண்டும் எனவும் திட்டமிட்டு, 2007-ம் ஆண்டு மென்பொருள் உருவாக்கப்பட்டது. இப்போது 1,032 மத்திய மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிக் கிளைகளில், 1,001 கிளைகளில் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் | 38 லட்சம் செலவில் பொதுவான மென்பொருள் உருவாக்கி, தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 522 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதை இந்தியா முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு பயன்படுத்தும் வகையிலும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடம் (நபார்டு) ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதத்துக்குள் அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கிகளும் கணினிமயமாகும் என்றார் கோ.சி. மணி. நிகழ்ச்சியில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் ஸ்வரண்சிங், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யதீந்திர நாத் ஸ்வைன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக