பண்ருட்டி:
பண்ருட்டி பகுதியில் வயிற்றுப் போக்கு நோயால் பாதிக்கப்பட்ட 75க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் பாலு (53), ஸ்ரீதர் (22), பரந்தாமன் (42) உட்பட 20க்கும் மேற்பட்டோருக்கு நேற்று முன்தினம் இரவு முதல் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்றும் செட்டப்பட்டறை, போலீஸ் லைன், அருள்ஜோதி நகர், திருவதிகை ஆகிய பகுதிகளிலிருந்தும் பலர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டனர். திடீர் வயிற்றுப் போக்கிற் கான காரணம் தெரியவில்லை.
பண்ருட்டி நகரத்தை பொறுத்தமட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள் ளது. சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டி மற்றும் ஒரு சில இடங்களில் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து வருவதாகவும், முதல்நாள் பிடித்து வைத்த தண்ணீர் மறுநாள் துர்நாற்றம் வீசுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இதே போன்று திருவாமூர், சேமக்கோட்டை, கண்டரக் கோட்டை, மணம்தவிழ்ந்தபுத்தூர், எல்.என்.புரம், சிறுவத்தூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த தங்கம் (24), செல்லம்மாள் (50), தனலட்சுமி (60) உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 37 பெண்கள் உட்பட 75க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக