உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

கடலூர் அஞ்சல் நிலையத்தில் இயல்புப் பணிகள் பாதிப்பு

கடலூர்:

          கடலூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் பதவி தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டதால், இயல்பான பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

            கடலூரில் பல கிளை அஞ்சல் நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டு விட்டன.   இதனால் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சல் நிலையத்தில், பதிவுத் தபால், மணியார்டர், விரைவு அஞ்சல், அஞ்சலக சேமிப்பு, சிறு சேமிப்பு போன்ற பல்வேறு பணிகளுக்காக, பெரும்பாலான நாள்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கவுண்டர்கள் அமைந்து இருக்கும் பகுதியில் போதிய இடவசதி இல்லாததால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருந்தும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் அப்படியொரு வசதி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு, பல நேரங்களில் வெப்பக் காற்றால் தகிக்கும் நிலை உள்ளது.

           திங்கள்கிழமைகளில் மக்கள் அஞ்சல் நிலையத்துக்குள் சென்று வெளிவருவதே சிரமமான காரியம்.  இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள், இந்த அஞ்சல் நிலையத்தில் திங்கள்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. ஏராளமான இளைஞர்களும் இளம் பெண்களும் படிவங்களைப் பெறுவதற்காக முண்டி அடித்துக் கொண்டு, அஞ்சல் நிலைத்துக்குள் செல்வதும், பலரை இடித்துத் தள்ளிக் கொண்டு வெளிவருவதுமான நிலை, பார்ப்பதற்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

           இதனால் அஞ்சல் நிலையத்துக்கு இயல்பான பணிகளுக்கு வந்த பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலரும் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார்கள். அவர்கள் கவுண்டர்கள் பக்கம் செல்லவே முடியாத நிலை ஏற்பட்டது. இயல்பான பணிகள் நடைபெற்றதாகவே தெரியவில்லை. அஞ்சல் தலைக்களைக் கூட வாங்க முடியாமல் பலர் திரும்பிச் சென்றனர். விண்ணப்பப் படிவங்களை வாங்க வருவோரின் வாகனங்களை, அஞ்சல் நிலையத்தின் முகப்பில் தாறுமாறாக நிறுத்தி விட்டதால், பலர் உள்ளேயே நுழைய முடியாமல் அவதிப்பட்டனர்.

                  அஞ்சல் நிலையங்களில் இத்தகைய விண்ணப்பப் படிவங்கள் விற்பனையை மேற்கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் அதற்கென தனி கவுண்டர்களையும், ஊழியர்களையும் நியமித்து செயல்படுவதன் மூலமே, இயல்புப் பணிகள் பாதிக்கப் படாமல் இருக்கும் என்பது பொதுமக்களின் கருத்து. அஞ்சல் நிலையத்தின் வடக்குப் பகுதி நுழைவு வாயில் உள்ள இடத்தை, இதற்கென ஏன் பயன்படுத்தக் கூடாது என்றும் பலர் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் கூறுகையில், 

             தந்தி மணியார்டர் போன்ற அத்தியாவசிய சேவைகூட முடியவில்லை. பல்வேறு படிவங்கள் விநியோகத்தின்போதும் இதே நிலைதான் ஏற்படுகிறது. தலைமை அஞ்சல் நிலைய நிர்வாகம், இயல்பான பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார்.

இதுபற்றி அஞ்சல் நிலைய தலைமை அதிகாரி கூறுகையில்,

               கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் 4 கவுண்டர்களில் விநியோகிக்கப்படுகின்றன. படிவங்கள் விநியோகம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் கணினி மூலம் நடப்பதால், வேறு இடத்துக்கு மாற்றவும் முடியவில்லை.  எனவே 20-ம் தேதிவரை இதே நிலைதான் நீடிக்கும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior