கடலூர்:
கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடித்த சூறாவளிக் காற்றினால் 250 ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்தன.
தென்மேற்கு பருவக் காற்றினால் கடலூரில் சில தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இரு நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது. இரு நாள்களாக மழையுடன் பலத்த சூறாவளிக் காற்றும் வீசியதால், வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.
கடலூரை அடுத்த கிழக்கு ராமாபுரம், எஸ்.புதூர், நடுக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் 250 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த 2.5 லட்சம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவரும் வாழை விவசாயியுமான ஞானசேகரன் கூறுகையில்,
"இரு நாள்களில் அடித்த சூறாவளிக் காற்றினால் 250 ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்துவிட்டன. அனைத்து வாழை மரங்களும் பூக்கள் உதிர்ந்து காய்கள் முற்றும் நிலையில் இருந்தன. இன்னும் 2 மாதத்தில் அறுவடைக்கு வர வேண்டிய வாழை மகசூல் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது' என்றார்.
இது குறித்து வேளாண் துறையில் கூறியது
"தோட்டக் கலைத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு நடத்த இருக்கிறார்கள். அரசு விதிகளுக்கு உள்பட்டு சேதம் இருந்தால் இழப்பீடு வழங்கப்படும்' என்று தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக