உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

பராமரிப்பின்றி பாழாகும் பழமையான சேத்தியாத்தோப்பு அகத்தீஸ்வரர் கோவில்




சேத்தியாத்தோப்பு: 

            அறநிலையத் துறையின் அலட்சியத்தால், 800 ஆண்டு பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில், பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. 

            கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்துள்ள பரதூர் கிராமத்தில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.  பரத்வாஜ மகரிஷி ஆசிரமம் அமைந்திருந்த பகுதி என்பதால், இவ்வூருக்கு பரதூர் என்று பெயர் உருவானதாக  கூறப்படுகிறது. 800 ஆண்டுகளுக்கு  முன் அகத்திய முனிவர் தினசரி பூஜைகள்  மேற்கொண்ட கோவில் இது எனவும்,  அதனாலேயே இக்கோவிலுக்கு  அகத்தீஸ்வரர் கோவில் என்ற வரலாறும் உண்டு. 

               இந்து சமய அறநிலையத் துறையின் பொறுப்பில் உள்ள இக்கோவிலில் விநாயகர் மற்றும் முருகர், நவக்கிரகம், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, அகிலாண்ட நாயகி உள்ளிட்ட சன்னிதிகள் அமைந்துள்ளன. ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலில் அனைத்து சன்னிதியின் கோபுர பகுதியிலும் செடி, கொடிகள்  மரம்போன்று வளர்ந்து கோபுரத்தையே மறைத்து நிற்கின்றன. சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு 40 ஏக்கர் நிலம் உள்ளது. 

           இந்நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கோவிலை பராமரிக்க வேண்டும் என, முன்னோர் தங்களது சொத்துக்களை கோவிலுக்கு தானமாக கொடுத்துள்ளனர். ஆனால், கோவில் நிலத்திற்கு தற்போது குத்தகை வசூலிக்கப்படுகிறதா, நிலம்  பயிரிடப்படுகிறதா என்ற விவரம் ஏதும் தெரியாமல் பரம ரகசியமாக உள்ளது.  தற்போது தில்லைகாளியம்மன் கோவிலின் செயல் அலுவலரே இக்கோவிலையும் நிர்வகித்து வருவதாக இப்பகுதி  மக்கள் தெரிவிக்கின்றனர். 

                  கோவிலுக்கு எதிரே உள்ள தீர்த்த குளம் தற்போது ஆடு, மாடுகள் குளிக்கும் குட்டையாக மாறி உள்ளது.  வருவாய்க்கு வாய்ப்பே இல்லாத சிறிய கோவில்களில் கூட தினசரி ஆறு கால பூஜை நடந்து வரும் நிலையில்,  இக்கோவிலில் தினசரி இரண்டு கால பூஜை நடக்கிறதா என்பது கேள்விக் குறியாக உள்ளது. கோவில் சீரமைக்கப்படாததால் அதன் அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்தின் வழியாக கோவில் மதில் சுவரைத் தாண்டி சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior