உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

திருக்குறளை இப்படியும் கொல்லலாமா?


தவறாகவும், குறள் வெண்பா முறையை மீறியும் எழுதப்பட்டுள்ள திருக்குறள் (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது).
 
விருத்தாசலம்:

          விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலக மதில் சுவரில் குறள் வெண்பா முறையை மீறியும், தவறாகவும் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. இதை நெடுஞ்சாலைத்துறை கவனித்து திருத்திக்கொள்ள வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

            தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலையின் அழகைக் கூட்டும் வகையில் அந்தந்த நகரங்களின் சிறப்புகளை விளக்கக்கூடிய ஓவியங்களையும், திருக்குறள் மற்றும் உலக அறிஞர்களின் பொன்மொழிகளையும் எழுதி வருகின்றனர். பெரும்பாலான நகரங்களில் இந்த பணி நிறைவு பெற்றுள்ளது. நெடுஞ்சாலைத் துறையின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். 

            இதேபோல் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்கு சொந்தமான மதில் சுவரில் திருக்குறளை எழுதியுள்ளனர்.÷இதில் சில குறள்கள் தவறாகவும், குறள்வெண்பா முறைக்கு மாறாகவும் எழுதப்பட்டுள்ளன. மேல் வரியில் நான்கு சீரும், கீழ் வரியில் 3 சீரும் என்ற முறையில் திருக்குறள் அமைக்கப்பட்டுள்ளது. 

            ஆனால் விருத்தாசலம் நெடுஞ்சாலைத் துறை சார்பில் எழுதப்பட்டுள்ள திருக்குறளானது மேல் மற்றும் கீழ் வரிகளில் 3 சீர்களாக எழுதியுள்ளனர். அதேபோல் மேல்வரியில் 4 சீரும் கீழ்வரியில் 4 சீர்களில் குறள் முடிவது போன்றும் எழுதியுள்ளனர். மேலும் திருக்குறளில் முதல் அடி தொடங்குவதற்கு நேராகவே இரண்டாவது அடியும் தொடங்கும். இந்த அமைப்பு முறையையும் மாற்றி எழுதியுள்ளனர்.

                மக்கள் கூடும் இடங்களில் திருக்குறள் உள்ளிட்ட உலக அறிஞர்களின் பொன்மொழிகளை எழுதிவைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், இதுபோன்று தவறாக எழுதப்படுவதை அதிகாரிகள் கவனித்து அவற்றை உடனடியாக திருத்த வேண்டும் என தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் எழுதப்பட்டுள்ள திருக்குறள்களில் உள்ள தவறுகளை திருத்த நெடுஞ்சாலைத்துறை முன்வருமா?

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior