உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

கிராம பி.பீ.ஓ.க்களுக்கு தமிழக அரசு மானியம்




          கிராமப்புறங்களில் பி.பீ.ஓ., (வெளிப்பணி ஒப்படைப்பு நிறுவனம்) தொடங்க ஒரு தனியார் நிறுவனத்துக்கு | 7.5 லட்சம் வரை மானியம் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

              இதன்மூலம், நகரங்களில் மட்டுமே இயங்கி வரும் பி.பீ.ஓ. நிறுவனங்கள் கிராமப்புறங்களை நோக்கிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.  கிராமப்புறங்களிலும் பி.பீ.ஓ.க்களைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, கிராமப்புற பி.பீ.ஓ.க்களுக்கான கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது.  சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள், மதுரை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமல்லாது, மாநிலங்களில் உள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கும் பி.பீ.ஓ. நிறுவனங்களைக் கொண்டு செல்ல வகை செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கு: 

             கிராமப்புற பி.பி.ஓ.க்களை அமைக்கும் பணியில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முக்கியப் பங்காற்றும். அதாவது, பி.பீ.ஓ. நிறுவனங்களைத் தொடங்க யாரெல்லாம் ஆர்வம் காட்டுகிறார்களோ அவர்களை அடையாளம் கண்டு தகுதியானவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்.  பி.பீ.ஓ. நிறுவனங்களை உருவாக்க காரணமாக அமையும் தொழில் நிறுவனங்களுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் அமைப்புகளுக்கும் இடையே பாலமாக இருந்து ஆலோசனைகளையும், போதிய உதவிகளையும் தகவல் தொழில்நுட்பத் துறை அளிக்கும். 

நிதி உதவி:  

                கிராமப்புற பி.பீ.ஓ.க்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு இரண்டு வகைகளில் நிதி உதவி அளிக்கப்படும். ஒன்று மூலதன நிதியுதவி, மற்றொன்று பயிற்சிக்கான நிதியுதவி.  குறைந்தது 100 பேருடன் மூன்று ஆண்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய பி.பீ.ஓ. நிறுவனங்களுக்கு 15 சதவீதம் அதாவது | 3 லட்சம் வரை மானியம் அளிக்கப்படும். பி.பீ.ஓ. அமைப்பதற்கான வன்பொருள்கள் உள்ளிட்ட கருவிகளைப் பெற இந்த மானியத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

             மற்றொன்று, பயிற்சிக்கான மானியமாக அரசு அளிக்கிறது. 100 பேருக்கு 3 மாதங்கள் பயிற்சியும், அதன்பின் 9 மாதங்கள் பணியும் வழங்கும் நிறுவனத்துக்கு மானியம் அளிக்கப்படும். நபர் ஒருவருக்கு மாதத்துக்கு | 1,500 வீதம் 3 மாத பயிற்சி காலத்துக்கான உதவித் தொகை மொத்தம் | 4.5 லட்சம் வழங்கப்படும். பயிற்சியையும், பணியையும் வழங்கிய ஓராண்டுக்குப் பிறகு இந்தத் தொகை அளிக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் வெளியிட்ட அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பணிகள்? 

                    கிராமப்புற பி.பீ.ஓ.க்கள் மூலம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விவரங்களைத் திரட்டுதல், அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்தல், தகவல்கள் மேலாண்மை, தகவல்களை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். குரல் வழியிலான பி.பீ.ஓ.க்கள், அதாவது ஒரு நிறுவனத்தின் சேவைகளை தொலைபேசி வழியாக தெரிவிக்கும் பணியும், வர்த்தக ஆய்வு, சர்வே, விற்பனை போன்ற பணிகளும் கிராமப்புற பி.பீ.ஓ.க்கள் வழியாக செய்யப்படும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior