பண்ருட்டி:
பண்ருட்டி நகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றாமல் சீர்கேடாக உள்ளதாகக் கூறி, நகராட்சி அதிகாரிகள் அறையை தி.மு.க., கவுன்சிலர் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி 14வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கதிரேசன், நேற்று காலை 11 மணியளவில் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, சுகாதாரப் பிரிவு அலுவலகத்தில் சுகாதார அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர்கள் ஆல்பர்ட் ஞானதீபம், பாண்டியன், வருவாய் உதவியாளர் ஜெய்சங்கர், சேர்மன் டிரைவர் ரியாஸ், உதவியாளர் முத்து உள்ளிட்டோர் இருந்தனர். அவர்களிடம், "எங்கள் வார்டு பகுதியில் கடந்த 37 நாட்களாக குப்பை அள்ளாமல், சுகாதாரக் கேடாக உள்ளது.
தினமும் காலையில் மின் விசிறியின் கீழ் உட்கார்ந்து கொண்டு காற்று வாங்குகிறீர்கள், அங்கே வார்டு கவுன்சிலர்களை பொதுமக்கள் தரக்குறைவாக பேசுகின்றனர்' எனக் கூறி, சுகாதாரப் பிரிவு அலுவலகத்தின் வெளி தாழ்ப்பாளை பூட்டினார். மேலும், யாரும் இதை திறக்கக் கூடாது என எச்சரித்தார். தகவலறிந்த சேர்மன் பச்சையப்பன், பொறியாளர் சுமதி செல்வி, கவுன்சிலர்கள் ரகூப், பரமசிவம், ராமகிருஷ்ணன் ஆகியோர், கவுன்சிலர் கதிரேசனுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அறையில் இருந்த அதிகாரிகளை மீட்டனர்.
இதனால், நகராட்சி அலுவலகத்தில் 20 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் குப்பைகள் அள்ளவில்லை என கூறி, பிற்பகல் மதியம் 2.30 மணியளவில் நகராட்சி வாயில் முன், கதிரேசன் மறியலில் ஈடுபட்டார். மீண்டும் சேர்மன் பச்சையப்பன் கதிரேசனை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். ஆனால், கவுன்சிலர் மறுத்தார். தி.மு.க., கவுன்சிலர் தட்சணாமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் பன்னீர்செல்வம், டிரைவர் ரவி ஆகியோர் கதிரேசனை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு சேர்மன் அறைக்குச் சென்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் கூறியதைத் தொடர்ந்து, கதிரேசன் வெளியேறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக