உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நடுவீரப்பட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடுவீரப்பட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், டிசம்பர் 26, 2011

கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கடலூர் : 

               ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் சிகிச்சை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

             ஒரத்தூர், நடுவீரப்பட்டு, ஸ்ரீமுஷ்ணம், ஆயங்குடி, மருங்கூர், பெண்ணாடம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கி வரும் பல் சிகிச்சை மையங்களில் பல் டாக்டர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதில் வாரத்திற்கு 6 நாள் பணி வழங்கப்படும். இவர்களுக்கு தினசரி மூன்று மணி நேரத்திற்கு முறையே 500 மற்றும் 250 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். பல் மருத்துவத்தில் பட்டப் படிப்பும், உதவியாளர் பணிக்கு பல் மருத்துவ பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

            விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் கடலூரில் இயங்கி வரும் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையில் இயங்கும் மாவட்ட சுகாதார குழும உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வியாழன், ஜூன் 16, 2011

பண்ருட்டியில் அரசு பேருந்து நிறுத்தம்: மாணவர்கள் அவதி

நடுவீரப்பட்டு : 
   
              பண்ருட்டியிலிருந்து நடுவீரப்பட்டு வழியாக நெல்லிக்குப்பம் செல்லும் அரசு பஸ் அடிக்கடி நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். 

             பண்ருட்டியிலிருந்து சாத்திப்பட்டு, சி.என். பாளையம், நடுவீரப்பட்டு, பாலூர், குச்சிப்பாளையம் வழியாக நெல்லிக்குப்பம் வரை அரசு பஸ் தடம் எண் 17 இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் காலை 6.30 மணிக்கு நடுவீரப்பட்டிற்கு வந்து செல்லும். இந்த பஸ்ஸில் நடுவீரப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள், தனியார் கம்பெனி ஊழியர்கள் என அனைவரும் பாலூர் மற்றும் நெல்லிக்குப்பம் சென்று அங்கிருந்து வேறு பஸ் பிடித்து சென்று வந்தனர். 

              இந்த பஸ் கடந்த 10 நாட்களாக வராததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த பஸ் நெல்லிக்குப்பத்திலிருந்து நடுவீரப்பட்டு வழியாக காலை 7.45க்கு பண்ருட்டிக்கு சென்று வந்தது. இந்த பஸ்ஸில் தான் சாத்திப்பட்டு, நெல்லித்தோப்பு, நடுவீரப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பண்ருட்டியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் சென்று படித்து வந்தனர். இந்த வழித்தடத்தில் இந்த ஒரு பஸ் தான் காலை நேரத்தில் உள்ளதால் இந்த பஸ்சை நம்பி இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் சென்று வந்தனர். 

            இந்த பஸ் அடிக்கடி முன் அறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்படுவதால் நேரத்தில் செல்ல முடியாமல் காலை வேளையில் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆகையால் இந்த பஸ்சை தொடர்ந்து இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




Read more »

வியாழன், டிசம்பர் 23, 2010

பண்ருட்டியில் குறித்த நேரத்தில் இயக்காத பஸ்மாணவ, மாணவிகள் அவதி

நடுவீரப்பட்டு:

           சாத்திப்பட்டு - கடலூர் செல்லும் அரசு பஸ் சரியான நேரத்திற்கு வராததால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர்.

            பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு, சி.என்.பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கீழ்மாம்பட்டு, நெல்லித்தோப்பு, இடையார்குப்பம், பட்டீஸ்வரம், கொஞ்சிக்குப்பம், நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடலூர், பண்ருட்டி ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் பள்ளி, கல்லூரி நேரத்திற்கு பஸ் வசதி இல்லாததால் சாத்திப்பட்டு - கடலூருக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் காரணமாக அரசு பஸ் தடம் எண் 27 எஸ் இயக்கப்படுகிறது.

             இந்த பஸ் கடந்த சில தினங்களாக சரியான நேரத்திற்கு வருவதில்லை. காலை நேரத்தில் சாத்திப்பட்டில் காலை 7.50க்கு கிளம்பி சி.என்.பாளையத்திற்கு 8 மணிக்கு வர வேண்டும். ஆனால் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை தாமதமாக வருகிறது.இந்த சிங்கிளில் தான் பெரும்பாலான மாணவ, மாணவிகள் கடலூர், பண்ருட்டி பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்குச் செல்கின்றனர்.

         சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லூரிக்கு போய் சேர முடியாததால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். மாணவர்கள் நலனுக்காக விடப்பட்ட பஸ் காலதாமதமாக வந்தால் அவர்களுக்காக பஸ் இயக்கப்படுவதில் அர்த்தமில்லாமல் போகிறது. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பஸ்சை சரியான நேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

செவ்வாய், அக்டோபர் 26, 2010

சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டடப்பணி மந்தம் மாணவ, மாணவிகள் அவதி

நடுவீரப்பட்டு : 

               சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

            பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் படிக்க போதிய இட வசதி இல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் பள்ளியில் கூடுதல் மாணவ, மாணவிகள் படிக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் அரசு நபார்டு திட்டத்தின் கீழ் 70 லட்சம் மதிப்பில் 9 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிவறை ஆகியவை கட்ட அனுமதி அளித்தது. இதற்கான கட்டடப்பணி கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கியது. பணிகள் துவங்கிய சில நாட்களில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

                    மாணவ, மாணவிகளுக்கு வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் தற்காலிகமாக பாடம் நடத்தப்படுகிறது. மழை பெய்தால் வகுப்பு நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கக்கூடிய நிலை உள்ளது. அதிகாரிகள் பள்ளியின் கட்டடப் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

புதன், அக்டோபர் 06, 2010

நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., முயற்சியில் விடப்பட்ட அரசு பஸ் அடிக்கடி ஆப்சென்ட்

நடுவீரப்பட்டு : 

                சாத்திப்பட்டு மற்றும் நடுவீரப்பட்டு பகுதிக்கு நெல்லிக்குப்பம் எம். எல்.ஏ., முயற்சியால் விடப்பட்ட அரசு பஸ் அடிக்கடி "ஆப்சென்ட்' ஆவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 

                  பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டிலிருந்து கடலூர் செல்ல பஸ் வசதி இல்லாததால் அப்பகுதி மாணவ, மாணவிகள் மற் றும் வேலைக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரனிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சாத்திப்பட்டிலிருந்து  சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு, பாலூர் வழியாக கடலூருக்கு அரசு டவுன் பஸ் (தடம் எண். 27 எஸ்) காலை மற்றும் மாலை என இரு வேளை இயக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கொஞ்ச நாட்கள் மட்டுமே மகிழ்ச்சி நீடித்த நிலையில் தற் போது எவ்வித முன் அறிவிப்புமின்றி மாதத்தின் பல நாட்கள் பஸ் இயக்கப்படுவதே இல்லை.

                 திடீரென பஸ் நிறுத்தப்படுவதால் இப் பகுதியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற் றும் வேலைக்குச் செல்பவர்கள் காத்து கிடந்து ஏமாற்றத்துடன் அடுத்த பஸ் பிடித்துச் செல்ல 10 மணிக்கு மேல் ஆகிறது. ஒவ்வொரு நாளும் பஸ் வருமோ? வராதோ? என சந்தேகத்தின் பேரிலேயே பஸ் நிறுத்தத்தில் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை உள்ளது. 

                        எம்.எல்.ஏ., முயற்சியால் விடப்பட்ட அரசு பஸ் முறையாக இயக்கப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களை வேதனையடையச் செய்துள்ளது. மேலும் சாத்திப்பட்டிலிருந்து கடலூர் செல்லும் ஒரே அரசு பஸ் இதுதான் என்பதால் இந்த பஸ்சை காலை முதல் இரவு வரை இதே வழி தடத்தில் தொடர்ந்து இயக்க எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

புதன், ஆகஸ்ட் 18, 2010

குறுவட்ட விளையாட்டுப் போட்டி சி.என்.பாளையம் மாணவி வெற்றி

நடுவீரப்பட்டு : 

                குறுவட்ட விளையாட்டுப் போட்டியில் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வெற்றி பெற்றார். கடலூர் கல்வி மாவட்ட மகளிர் உடற்திறன் கழகம் சார்பில் பண்ருட்டி குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் நடந்தது. 14 வயதுதிற்குட்பட்ட  மாணவிகள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தேவி முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி, உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

நலத்திட்டங்களை செயல்படுத்துவதில், தமிழகம் முதலிடம்: பன்னீர்செல்வம்

நடுவீரப்பட்டு: 

         அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலாவதாக உள்ளது என அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.

சி.என். பாளையத்தில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் பன்னீர் செல்வம் பேசியது :

                சி.என். பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை பொதுமக்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாக  நானே முன் வந்து தரம் உயர்த்திட நடவடிக்கை எடுத்தேன். 1996ம் ஆண்டு நெல்லிக் குப்பம் தொகுதி இடைத் தேர்தல் நடந்தபோது தொகுதி முழுவதும் 15 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்தன. அதில் சி.என். பாளையம் பகுதியில் 1 கோடி ரூபாய் பணிகள் நடந்தன.நமது முதல்வர் கிராம பகுதிகள் மற்றும் நகரங்களில் பாலம் கட்டி மக்கள் மனதில் இடம் பெற வைத்துள்ளனர். இந்த பாலம் இரண்டு ஊராட்சியை இணைக்கும் பாலம் என்பதால் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.  

                  கொள்ளிடத்தில் 48 கோடி ரூபாய் மதிப்பிலும், நொச்சிக்காடு பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலும்  பாலம் கட்டப்பட்டு வருகிறது.கருணாநிதி ஆட்சியில் சாதனைகள் பல நடந்து வருகின்றது. ஜெ., ஆட்சியில் சி.என்.பாளையம் ஊராட்சியில் ஏதாவது நலத்திட்டங்கள் வழங்கப்பட்டதா என எண்ணிப் பாருங்கள். இந்த அரசு சொன்னதை செய்யும் என பேசினார்.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

நரியன் ஓடை மண் கரையிலேயே கொட்டப்பட்ட அவலம்

நடுவீரப்பட்டு: 

          நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கரையில் மண் கொட்டியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

            நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஓடை ஆழப்படுத்தும் பணி நடந்தது. சி.என்.பாளையம் யாதவர் வீதி வழியாகத்தான் இந்த ஓடையில் இறங்கி சி.என்.பாளையம் நடுத்தெரு, யாதவர் தெரு, சொக்கநாதன் பேட்டை, காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தம் மற்றும் மற்ற பகுதிக்கு செல்ல வேண்டும். இந்த ஓடையை தற்போது ஆழப்படுத்தி தோண்டப்பட்ட மண் அனைத்தையும் அங்கேயே கொட்டி கரையை மலை போல் உயர்த்தி விட்டனர். 

                    இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வயதானவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை பெய்தால் மண் கரைந்து மீண்டும் ஓடைக்கே வரும் நிலை உள்ளது.மண் மேட்டை அகற்றி நடை பாதைக்கு வழி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

வியாழன், ஜூலை 15, 2010

நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்

நடுவீரப்பட்டு: 

               நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன் முதலில் அறுவை சிகிச்சை முறையில் ஆண் குழந்தை பிறந்தது. பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டு 24 மணி நேரம் பிரசவம் பார்க்கும் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. 

                கடந்த 11ம் தேதி காலை 10 மணிக்கு குறவன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன் மனைவி சாந்தியை (27) பிரசவத்திற்காக நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பரிசோதனையில் சுக பிரசவத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

Read more »

செவ்வாய், ஜூலை 13, 2010

நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையம் கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

நடுவீரப்பட்டு: 

                  நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையம் கிராமத்தில் வரும்முன் காப் போம் திட்டதின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.

                 ஊராட்சி தலைவர் தங்கம் நந்தகோபால் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி முன்னிலை வகித்தார். முகாமில் ஸ்கேன், இ.சி.ஜி., ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. 987 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 22 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். ஒன்றிய கவுன்சிலர் ஆசைவள்ளி, ஊராட்சி துணைத் தலைவர் குப்புசாமி, முருகன், டாக்டர் ரவிச்சந்தின், சுகாதார மேற்பார்வையாளர் சீத்தாராமன், சுகாதார ஆய்வாளர் தாமோதரன், தேவசேனா மற்றும் பலர் பங்கேற்றனர்.

Read more »

திங்கள், ஜூன் 28, 2010

பண்ருட்டி அருகே தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் சாவு

கடலூர் : 

                  பண்ருட்டி அருகே தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் இறந்தனர். புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மனைவி கிரிஜா மற்றும் மகள் கீர்த்திகா (12) ஆகியோர் பண்ருட்டி அடுத்த வானமாதேவியில் உள்ள உறவினர் சத்தியசீலன் வீட்டிற்கு வந்திருந்தனர்.

                   சத்தியசீலன் வீட்டிற்கு அருகில் உள்ள தட்சணாமூர்த்தி மகள் பிரியா (12), மற்றும் கீர்த்திகாவும் நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் ஐந்து அடி ஆழமுள்ள குட்டையில் தவறி விழுந்து அதில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கினர். மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டனர். இதில் பிரியா இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கீர்த்திகா கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். நடுவீரப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

வியாழன், ஜூன் 10, 2010

ஒரே நாளில் 20 பேரை கடித்துக் குதறிய வெறிநாய்

நடுவீரப்பட்டு : 

                 கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சி.என். பாளையத்தில் வெறி நாய் கடித்ததில் 20க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர்.

                    பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையத்தில் கடந்த சில நாட்களாக நாய் தொல்லை அதிகரித்துள்ளது. அப்பகுதியில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் என எவரையும் விட்டு வைக்காமல் துரத்திச் செல்வது வழக்கம். இதில் ஒரு சில வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 20க்கும் மேற்பட்டவர் களை வெறி நாய் ஒன்று கடித்து குதறியது. இதில் கச்சிராயர்குப்பத்தைச் சேர்ந்த தனசேகர், நடுப்பேட்டை சங்கர், பெருமாள், மகாலட்சுமி, தண்டபாணி உள்ளிட்ட 20க் கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். நாய் கடிக்கு ஆளான அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தடுப்பு ஊசி போட்டுக் கொண்டனர்.

Read more »

வியாழன், மே 13, 2010

நடுவீரப்பட்டில் இருக்கும் கட்டடங்களை விட்டு விட்டு மீண்டும் கட்ட இடம் தேர்வு

நடுவீரப்பட்டு : 

              சி.என்.பாளையம் ஊராட்சியில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நூலகம், அரசு நடுநிலைப் பள்ளி கழிவறை உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்படாமல் மீண்டும் அதே கட்டடங்கள் கட்ட இடம் தேர்வு செய்து மக்கள் வரிப்பணத்தை அதிகாரிகள் பாழாக்கி வருகின்றனர்.

               பண்ருட்டி அடுத்த சி. என்.பாளையம் ஊராட்சி காலனியில் கடந்த 1996ம் ஆண்டு எம்.பி., நிதியில் நூலக கட்டடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப் பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறப்பு விழா நடத்தப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. அதேப்போன்று மழவராயநல்லூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் முழு ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவறை கட்டப்பட்டது. இதன் மிக அருகிலேயே ஊராட்சியின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. ஆனால் கழிவறைக்கு தண்ணீர் இணைப்பு வழங்காததால் கழிவறையை ஆசிரிய, ஆசிரியைகள் பயன்படுத்த முடியாத நிலையில் கதவுகளையும் சமூக விரோதிகள் திருடி சென்று விட்டனர். மீண்டும் கடந்த 1999 - 2000ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் ரூபாயில் கழிவறை கட்டப்பட்டு அதுவும் பயன்படுத்த முடியாமல் பாழாகியது. இந்நிலையில் தற் போது மீண்டும் ஒரு கழிவறை கட்டப்பட்டு வருகிறது. கட்டடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா காணப்படாமலும், முறையாக பராமரிக்காமலும் வீணாகி வருவதும் மீண்டும் அதே போன்று கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து இடம் தேர்வு செய்வதும் என அதிகாரிகள் மக்கள் வரிப்பணத்தை பாழாக்கி வருகின்றனர்.

Read more »

செவ்வாய், மே 11, 2010

ரேஷன் கார்டு, இலவச 'டிவி' உண்டு நரிக்குறவர்களுக்கு நிரந்தர வீடு இல்லை

நடுவீரப்பட்டு : 

              நடுவீரப்பட்டு ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் நரிக்குறவர்கள் வீடு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் நரிக் குறவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவைகள் உள்ளது. தற்போது நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தத்திற்கு அருகில் உள்ளகைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான  புளியந்தோப்பில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் இலவச 'டிவி' வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் வீட்டிற்கு மின் வசதி இல்லாததால் அந்த 'டிவி'யை  பெட்டிக்குள் வைத்து பத்திரப்படுத்தி வைத்துள் ளனர். இவர்கள் வசிக்க நிரந்தர வீடு, இலவச மனை பட்டா கேட்டு பல முறை அரசு  அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நிரந்தரமாக வசிக்க இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின் றனர். 'டிவி' கொடுத்த தமிழக அரசு அதை வைத்து பார்க்க நிரந்தர வீடு, மின்சாரம் வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது அறிவிற்கு:

வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - கி பி 1890



Read more »

திங்கள், மே 10, 2010

நரியன் ஓடை படிக்கட்டுகள் உடைந்து பொதுமக்கள் அவதி

நடுவீரப்பட்டு: 

                 நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையின் படிக்கட்டுகள் மிகவும் மோசமாக உள்ளதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நடுவீரப்பட்டு மருத்துவமனை மற்றும் வெளியூர் செல்ல பஸ் நிறுத்தம் செல்லவும், பள்ளி மாணவ, மாணவிகள் கடலூர் பள்ளிகளுக்கு செல்லவும் கடைவீதி உயர்மட்ட பாலம் வழியாக சென்றால் அதிக தூரம் இருப்பதால் யாதவர் வீதி வழியாக நரியன் ஓடையில் இறங்கி செல்வது வழக்கம்.இந்த வழியில் ஓடைக்கு இறங்க கட்டப்பட்ட படிக்கட்டுகள் மழை நீரால் அரிக்கப்பட்டு, நடக்க முடியாத நிலையில் உள்ளது. மழை நீர் இந்த படிக்கட்டு வழியாக ஓடையில் இறங்காமல் இருக்க தடுப்பு கட்டைகள் கட்ட வேண்டும்.

Read more »

புதன், மே 05, 2010

மருத்துவ முகாம்

 நடுவீரப்பட்டு: 

                  நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி தலைமை தாங்கினார். புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவமனை டாக்டர்கள் ஆனந்தி, பாரதி, பிரபாகரன், அருணாச்சலம், சமீனா யாஸ்மின், மேகா, சிதம் பரம் காது மூக்கு தொண்டை டாக்டர் சண் முகம், புதுச்சேரி நல்லõம் கிளினிக் டாக்டர் சதீஷ், நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் சுரேஷ்குமார், மாலா, சசிகலா, திவாகர் ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 68 பேருக்கு பரிசோதனை செய்து 32 பேரை மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்தனர். சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், கிராம செவிலியர்கள் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

செவ்வாய், மே 04, 2010

தேர்ச்சி பெற வேண்டுதல்: கோவில் சுவரில் தேர்வு எண்

 நடுவீரப்பட்டு: 

               நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில் சுவரில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற வேண்டும் என வேண்டுதலுடன் போட்டி போட்டு தங்களின் தேர்வு எண்ணை எழுதி வைத்துள்ளனர். ஒவ்வொரு தேர்வு வரும் போதும் மாணவ, மாணவிகள் தங்களது இஷ்ட தெய்வங்களின் கோவிலுக்கு சென்று பூஜை செய்துவிட்டு தேர்வு எழுத செல்வது வழக்கம். தேர்வு எழுதிய பின் அக் கோவில் சுவரில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக தங்களது தேர்வு எண்ணை எழுதி வைப்பது வாடிக்கையாகி விட்டது. நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில் சுவரில் இடமே இல்லாத அளவில் போட்டி போட்டுக் கொண்டு தேர்வு எண்ணை எழுதி வைத்துள்ளனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திங்கள், மே 03, 2010

உயர்மட்ட பாலத்திற்கு இணைப்பு சாலை போடாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி


நடுவீரப்பட்டு :

                 நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே கட்டப்பட்ட உயர் மட்ட பாலத்திற்கு இணைப்பு சாலை போடாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

              பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் கிராம சாலைகள் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. சி.என்.பாளையத்திலிருந்து பாலத்திற்கு செல்லும் இணைப்பு சிமென்ட் ரோடு மிகவும் குறுகலாக போடுவதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் வேலை முழுவதுமாக தடைப் பட்டது.

                     இது குறித்து நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ.,விடம் பொதுமக்கள் ரோட்டை முழுவதும் அகலப்படுத்தி தரமான சிமென்ட் சாலை போட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அவர் அந்த இடத்தை பார்வையிட்டு சாலையை அகலப்படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அப்பகுதியில் இருந்த கடைகள் ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்றப்பட்டது. ஆனால் சாலை போடும் பணி இது வரை நடக்கவில்லை. தற்போது பாலம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இணைப்பு சாலை இது வரை போடாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். நடுவீரப்பட்டு பகுதிகளிலிருந்து இரவு நேரத்தில் வரும் வெளியூர் வாகனங்கள் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, விடுபட்ட இணைப்பு சாலையை உடனடியாக போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

புதன், ஏப்ரல் 28, 2010

பாலம் கட்ட தோண்டப்பட்ட மண்ணை மழைநீர் ஓடையில் கொட்டிய அவலம்


நடுவீரப்பட்டு: 

                  நடுவீரப்பட்டு - சி.என்.,பாளையம் இடையே பாலம் கட்ட தோண்டப்பட்ட  மண்ணை ஓடையின் நடுவே கொட்டியதால் தண்ணீர் ஓட வழியின்றி உள்ளது.

                    பண்ருட்டி அடுத்த  நடுவீரப்பட்டு - சி.என்.,பாளையம் இடையே நரியன் ஓடையில் கிராம சாலைகள் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது. இதற்காக தோண்டப்பட்ட மண் முழுவதையும் பணியின் போது ஓடையில் மழை நீர் வந்து வேலை செய்ய இடையூறு ஏற்படுத்தாதவாறு அப்பகுதியில் உள்ள தெற்கு தெருவிற்கு செல் லும் வழியில் உள்ள சிறிய உயர் மட்ட பாலத்தின் அருகில் கொட்டினர். தற்போது பணி முடிவடைந்து பாலம் திறப்பு விழா நடத்துவதற்கு தயாராக உள்ளது. ஆனால் ஓடையில் கொட்டப்பட்ட மண் முழுவதும் அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டனர்.

                    இதனால் மழைக் காலங்களில் ஓடையில் ஓடும் தண்ணீர் வழியின்றி தேங்கும் நிலையும், தண்ணீர் அதிகரிக்கும் நிலையில் கரையையொட்டியுள்ள பகுதிகளிலும் தண்ணீர் உட்புகும். அதுமட்டுமின்றி புதிய உயர்மட்ட பாலத்தின் ஏழு கால்வாய்களில் ஐந்து கால்வாய்கள் மூடியுள்ளதால் இரண்டு கால்வாய் வழியாகத்தான் நீர் ஓடக் கூடிய நிலை உள்ளது. இதனால் பாலம் குறுகிய  காலத்தில் பாழடையும் நிலை உள்ளது. சி.என்.பாளையம் தெற்கு பகுதியில் தடுப்பு சுவர் கட்டாமல் அப்படியே விட்டு விட்டனர். நடுவீரப்பட்டு பகுதியில் தடுப்பு சுவர் சிறிய அளவிற்கு மட்டுமே கட்டியுள்ளனர். இதனால் மழை காலத்தில் மண் அரிப்பு ஏற்படும். எனவே, கிராம சாலைகள் மற்றும் நபார்டு அதிகாரிகள் பாலத்தை பார்வையிட்டு ஓடையில் உள்ள மண் முழுவதையும் அகற்றவும், தடுப்பு சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திங்கள், ஏப்ரல் 26, 2010

கோவிலில் அங்கன்வாடி மையம் : மரத்தடியில் மதிய உணவு சமையல்

நடுவீரப்பட்டு : 

             சி.என்.பாளையத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு இடவசதி இல்லாததால் குழந்தைகள் அருகில் உள்ள கோவிலில் படித்து வருகின்றனர்.
 
              பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சி காலனியில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. மையத்தில் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையத்திற்கு கட்டடம் ஏதுமில்லாததால் மாரியம்மன் கோவில் வாசலில் இயங்கி வருகிறது. குழந்தைகளுக்கு மதிய உணவு சமைப்பதற்கான பொருட்கள் அனைத் தும் அருகில் உள்ள 1987ம் ஆண்டு கட்டப் பட்ட ஊராட்சி 'டிவி' அறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி நடத்த கட்டடம்  இல்லாததால் அதன் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் உட்கார வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். மதிய உணவை வெட்ட வெளியில் மரத்தடியில் சமைத்து வழங்கும் நிலை உள்ளது. மழை காலங்களில் குழந்தைகள் உட்கார இடம் இல்லாமலும்,சமையல் செய்ய கூடாரம் இல்லாமலும் கடும் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் இந்த மையத்திற்கென தனியாக  கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior