காட்டுமன்னார்கோவில் :
கடலூர்- நாகை மாவட்டத்தை இணைக்கும் முட்டம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கும் பாலத்தில் ரெகுலேட்டருடன் கூடிய கதவணை அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
கடலூர்-நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் காட்டுமன்னார்கோவில் முட்டம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி துவங்கியுள் ளது. இதற்காக தமிழக அரசு மற்றும் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு காட்டுமன்னார்கோவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.கடந்த 2003 - 2004ல் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் என்ற இடத்தில் வெள்ள நீரை கட்டுப்படுத்த ரெகுலேட்டர் அமைத்து வடக்கு ராஜன், தெற்கு ராஜன் வாய்க்கால்களில் பாசனத்திற்காக உரிய நாட்களை விட 23 நாட்கள் தண்ணீர் விட திட்டம் தீட்டப்பட்டது.
ஆதனூரில் ரெகுலேட்டர் அமைக்க பூர்வாங்க மதிப்பீடு 56.8 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழக அரசு ஆதனூரில் அமைக்க இருக்கும் ரெகுலேட்டர் திட்டத்தையும், முட்டத்தில் அமைக்க இருக்கும் மேம்பாலம் திட்டத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே திட்டமாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நிறைவேற்றினால் தமிழக அரசுக்கு பொருட்செலவும் குறையும், கால விரயம் தவிர்க்கப்படும். கொள்ளிடத்தின் குறுக்கே மேல் அணையிலிருந்து 67வது மைல் கல்லில் ரெகுலேட்டருடன் கூடிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டி 150 ஆண்டிற்கு மேலாகிறது.
கடந்த ஓராண்டாக பாலம் மிகவும் பழுதடைந்ததால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பயணிகளும், சரக்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே புதிதாக கட்டவிருக்கும் முட்டம் பாலத்தை ரெகுலேட்டர்களுடன் கூடிய கதவணை பாலமாக வடிவமைப்பு செய்தால் அணைக்கரை ரெகுலேட்டருக்கு ஒரு மாற்று ரெகுலேட்டராக அமையும். ஆகவே இந்த பாலத்தை கதவணையுடன் கூடிய பாலமாக அமைத்து தர முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக