உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

அடிப்படை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை : ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ஒப்படைக்க முடிவு

கடலூர் : 

         அடிப்படை வசதியின்றி தவிக்கும் நெய் வேலி நகர மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

            நெய்வேலி நகரியத்தில் 21, 30 வது பிளாக்குகளில் 6 ஆயிரம் குடும்பத்தினர் 30 ஆண்டிற்கு மேலாக வசித்து வருகின்றனர். என்.எல்.சி., நிறுவனத்தில் கான்ட்ராக்ட் வேலை செய்து வரும் இவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. சாலை, குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இன்றி இப்பகுதி ஏழை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின் றனர். வீட்டிற்கு மின் இணைப்பு கோரி இப் பகுதி மக்கள் பல முறை அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதியிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. இதனைக் கண்டித்து பல போராட்டங் கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி., நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை.
                    இதனால் விரக்தியடைந்த இப்பகுதி மக்கள், அரசு வழங்கிய ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடமே திருப்பி கொடுத்து, தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க முடிவு செய்தனர். அதனையொட்டி அப் பகுதியை சேர்ந்த 300 பெண்கள் உட்பட 700 பேர் 3 பஸ், 10 வேன், 2 மினிலாரி, 2 டாடா ஏசிஇ வேன்களில் நேற்று காலை 11.45 மணி அளவில் கடலூர் கலெக் டர் அலுவலகம் முன்பாக உள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் வந்திறங்கினர். அனைவரும் குறைகேட்பு கூட்டத்தில் இருந்த கலெக்டரை சந்தித்து முறையிட திபு திபு வென கலெக்டர் அலுவலகத்தினுள் செல்ல முயன்றனர்.

               அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அடிப்படை வசதியை தரமறுக்கும் என்.எல்.சி., மற்றும் மாவட்ட நிர்வாகங்களை கண்டித்து கோஷமிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத் தினர். அப்போது நெய்வேலியை சேர்ந்த லெனின் கூறுகையில், கடந்த 30 ஆண்டிற்கும் மேலாக ஒரே இடத்தில் வசித்து வருகிறோம். இந்தியா சுதந்திரம் அடைந்து பொன்விழா கண்டது. ஆனால் நாங்கள் அடிப்படை வசதியின்றி அகதிகளாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு இந்த அரசு மின்விளக்கு வசதி செய்து கொடுக்க தயங்குவதேன். இந்தியா முழுவதும் ஒளிர நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை நாங்கள் பயன்படுத்தக்கூடாதா? எனவே மின்சாரம் கொடுக்காத அரசைக் கண்டித்து ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பி அரசிடமே கொடுத்து விடுகிறோம் என்றார்.
                 பின்னர் கலெக்டரை சந்திக்க 10 பேரை மட்டும் போலீசார் அனுமதித்தனர். அவர்கள் தங்கள் பகுதி பிரச்னை குறித்த மனுவை கலெக்டரை சந்தித்து கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் சீத்தாராமன், தாசில்தாரை அழைத்து இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், ஒரு மாதத்திற்குள் அடிப்படை வசதி செய்து கொடுப்பதாக அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று அனைவரும் நெய்வேலிக்கு திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior