கடலூர் :
"தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதிகளில் பள்ளிகள் கட்டுவதில்லை; மாறாக அப்பகுதியில் டாஸ்மாக் கடைகளை நிறுவி கலாசார சீரழிவை ஏற்படுத்தி வருகின்றனர்' என, சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூர் டவுன்ஹாலில் நடந்த சமூக சமத்துவ படை நிறுவனர் சிவகாமி, கூறியதாவது:
சமூக சமத்துவ படையில் கடலூர் மாவட்டத் தை கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்டம் என மூன்றாக பிரித்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நிலமற்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு விவசாய நிலம் வழங்க வேண் டும். அரசு இதற்கான தெளிவான வரையறை கொண்டு வர வேண்டும். 2007ம் ஆண்டோடு, இரண்டு ஏக்கர் நிலம் வழங்குவதை அரசு நிறுத்திக் கொண்டது. முழுமையாக செயல்படுத்தவில்லை. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்கின்றனர். ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதிகளில், பள்ளிக்கூடம் கட்டுவதில்லை. மாறாக அப்பகுதியில் டாஸ்மாக் கடைகளை நிறுவி, கலாசார சீரழிவை ஏற்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் நரிக்குறவர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள், நாவிதர்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
கல்விக் கடன்களை ஏழைகள் பெற முடியவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்காக காலனிகளை உள்ளடக்கிய தனி பஞ்சாயத்து உருவாக்கப்பட்டு, கிராமங்கள் தன்னிறைவு கொண்டதாக இருக்க வேண்டும். மதுராந்தகம் அடுத்த செய்யூரில், வரும் ஏப்., 14ம் தேதி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் பஞ்சமி நிலங்கள் மீட்பு மாநாடு நடக்கிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டம், பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக