உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

தென் மாவட்ட மக்களின் வரப்பிரசாதம் 'முட்டம் பாலம்' 40 ஆண்டு கனவு நனவாகிறது

சிதம்பரம் :

                           கடலூர், நாகை மாவட்ட மக்களின், 40 ஆண்டு கனவான, காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில், 43 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்ட, துணை முதல்வர் ஸ்டாலின், இன்று அடிக்கல் நாட்டுகிறார். கடலூர் - நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்களின், 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கடலூர் மாவட்ட எல்லையான காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, 43 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டப்படுகிறது.இரு மாவட்டத்தை இணைக்கும் இப்பாலத்தால், வியாபாரிகள், விவசாயிகள் பயன்பெறுவர். நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள், சென்னை செல்வதற்கு பிரதான சாலையாகிவிடும். இப்பகுதி மக்கள், கும்பகோணம், சேத்தியாத்தோப்பு, வடலூர் வழியாகவும், மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரி வழியாகவும் சென்று வரும் நிலையில், முட்டம் பாலம் கட்டி முடித்தால், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு வழியாக எளிதாக சென்று விடலாம். இதனால், போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பதுடன், 35 கி.மீ., தூரம் குறைவதால், ஒரு மணி நேர பயண நேரமும் குறையும். சென்னையில் இருந்து நாகை மாவட்டத்திற்கு செல்பவர்கள், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார் கோவில், முட்டம், பட்டவர்த்தி, வில்லியநல்லூர், நீடூர், மயிலாடுதுறை சென்று விடலாம்.
 
                           கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சுற்றியுள்ள கிராம மக்கள், மயிலாடுதுறை செல்ல சிதம்பரம் வந்து  சீர்காழி வழியாக செல்ல வேண்டி இருந்தது. அதே போன்று  நாகை கொள்ளிடக்கரை கிராம மக்களும்,  70 கி.மீ., சுற்றி வரவேண்டும். தற்போது பாலம் வந்துவிட்டால், 2.30 மணி நேரம் செல்ல வேண்டியதில்,  ஒரு மணி நேரம் மிச்சமாகிவிடும். கடந்த 1974ம் ஆண்டு, அப்போதை காட்டுமன்னார்கோவில் சேர்மனும், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தந்தையுமான கிருஷ்ணமூர்த்தி, முட்டம் பாலம் கட்ட, ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு கோரிக்கை வைத்தார். அப்போது பிள்ளையார் சுழி போடப்பட்ட பாலத்திற்கு, கடந்த 1996-2000 தி.மு..க., ஆட்சியில், பாலம் கட்ட முடிவு செய்து 27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. ஆனால், அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் கோ.சி.மணி, பாலத்தை தஞ்சை மாவட்டத்திற்கு கொண்டு சென்றார். பின், ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால், பாலம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
 
                        தற்போது, அமைச்சர் பன்னீர்செல்வத்தில் தீவிர முயற்சியால், முட்டம் கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்ட, நபார்டு உதவியுடன் தமிழக அரசு 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தொடர்ந்து, சேத்தியாத்தோப்பில் இருந்து முட்டம் வரையிலும், நாகை மாவட்டம் பாப்பாக்குடியில் இருந்து பட்டவர்த்தி, நீடூர் சாலையை அகலப்படுத்தி, தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலம் கட்ட மண் பரிசோதனை, நிலம் ஆர்ஜித பணிகள் முடிந்து கடந்த ஜனவரி 27ம் தேதி, பாலம் கட்ட பூமி பூஜை நடந்தது. ஈரோட்டை சேர்ந்த பிரபல கான்ட்ராக்டர் மூலம் பணிகள் துவங்கியுள்ளன. முதற்கட்டமாக ஆற்றில் தளவாட பொருட்கள் கொண்டு செல்ல செம்மண் சாலை அமைக்கப்படுகிறது. பாலத்தை ஒன்றரை ஆண்டிற்குள், கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென் மாவட்ட மக்களுக்கு பிரதான சாலையாக அமையவுள்ள இப்பாலத்திற்கு, துணை முதல்வர் ஸ்டாலின், இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior