உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

தி.மு.க., பிரமுகர் வீட்டில் நகை, பணம் கொள்ளை : கத்திமுனையில் 5 பேர் கும்பல் அட்டகாசம்


கடலூர் : 

                 கடலூர் அருகே திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வீட்டுக்குள் புகுந்து கத்தியைக்காட்டி மிரட்டி, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
 
                கடலூர் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராம் ரெட்டியார். மாவட்ட தி.மு.க., பிரதிநிதி. நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் இவரது மனைவி வசந்தா உடல்நிலை சரியில்லாததால் அறையில் படுத்திருந்தார். தம்பி மகன் ராஜ்குமாருடன் சுப்புராம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, காலிங் பெல் அடித்தது. ராஜ்குமார் கதவை திறந்தார். திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என ஐந்து பேர் தேங்காய், பூ, தாம்பூல தட்டுடன் திபுதிபுவென உள்ளே நுழைந்தனர்.
 
                கும்பலில் வந்த ஒருவன் கதவை தாழிட்டான். மற்றொருவன் ராஜ்குமார் கையைக் கட்டி, மூலையில் உட்கார வைத்தான். சத்தம் கேட்டு ஓடி வந்த சுப்புராம் கழுத்தில், மற்றொரு கொள்ளையன் கத்தியை வைத்து, சோபாவில் தள்ளினான். வீட்டில் சுப்புராம் வைத்திருந்த தி.மு.க., தொப்பியை கொள்ளையர்கள் எடுத்து அடையாளம் தெரியாதவாறு தலையில் மாட்டிக் கொண்டனர். "அமைச்சர் பொன்முடியின் பினாமி நீதானே, உன்னிடம் பல கோடி ரூபாய் இருக்கிறதாமே, பணத்தை எடுத்துக் கொடு' என, கொள்ளை கும்பல் மிரட்டியது.
 
                 பின், பீரோ சாவியை கேட்டனர். சாவி வங்கி லாக்கரில் இருப்பதாக சுப்புராம் கூறினார். கத்தியுடன் சுப்புராமை அழைத்துச் சென்று கடப்பாரையை எடுத்து வந்து பீரோவை உடைத்து 20 சவரன் நகை, வைரக் கம்மல், ரொக்கம் 18 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டனர். பூட்டியிருந்த மருமகள் அறையில் இருந்த பீரோவை அலசி ஆராய்ந்தனர். அதில் ஏதும் கிடைக்காததால் சுப்புராம் மனைவி வசந்தா அணிந்திருந்த கம்மல், வளையல், தாலி சரடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு, தாங்கள் வந்த வெள்ளை நிற சுமோ காரில் தப்பிச் சென்றனர்.
 
                 கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. தூக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். கைரேகை, தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் சாண்டி, வீட்டில் இருந்து 100 அடி தூரம் வரை ஓடி நின்றது. யாரையும் பிடிக்கவில்லை.

"விரைவில் பிடிபடுவர்' : 

           கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார். கொள்ளை சம்பவம் குறித்து அவர் கூறுகையில், "கொள்ளையர்கள் ஐந்து பேர் வந்துள்ளனர். டிரைவர், "சுமோ'விலேயே இருந்துள்ளார். சுமோ நம்பர் பிளேட் மீது வெள்ளை பேப்பர் ஒட்டியிருந்ததை சிலர் பார்த்துள்ளனர். கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மூன்று தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையில், கொள்ளையர்கள் பற்றிய முக்கிய தடயம் சிக்கியுள்ளதால் விரைவில் பிடிபடுவார்கள்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior