கடலூர்:
விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடலூர் மாவட்டத்தில் 11 மையங்களில் மறியல் போராட்டம் நடத்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்து உள்ளன. இவ் விரு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் குறைந்த விலையில் வழங்கி, ஊக வணிகத்தைத் தடை செய்து, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலை நியமன தடைச் சட்டத்தை ரத்து செய்து, அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மேற்கு வங்க அரசுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் ஏப்ரல் 8-ம் தேதி நாடு முழுவதும், இடதுசாரிக் கட்சிகள் சார்பில் 25 லட்சம் பேர் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியலில் ஈடுபட்டு சிறைகளை நிரப்பத் தீர்மானித்து உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மறியல் போராட்டம் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, நடுவீரப்பட்டு, திருமுட்டம் ஆகிய 11 மையங்களில் நடைபெறும். மறியல் கோரிக்கைகளை விளக்கி 4,5 தேதிகளில் மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்யப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் டி.மணிவாசகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
downlaod this page as pdf