நெய்வேலி:
ஆண்டிற்கு 45 லட்சம் டன்கள் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் திறன் கொண்ட என்எல்சி 2-ம் சுரங்க விரிவாக்கத்தை வரும் 5-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார் மத்திய நிலக்கரி மற்றும் புள்ளியியல் துறை இணையமைச்சர் பிரகாஷ் ஜெய்ஸ்வால். மத்தியப் பொதுத்துறை நிறுவனமான என்எல்சியில் 3 சுரங்கங்கள் உள்ளன. இவற்றில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டு அனல்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2-ம் சுரங்கத்தின் தற்போதய உற்பத்தித் திறனான ஆண்டிற்கு 105 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கப்படுகிறது. இந்த உற்பத்தித் திறனை 150 லட்சம் டன்னாக உயர்த்தும் நோக்கில் ரூ. 2 ஆயிரத்து 161 கோடி செலவில் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணிகளை பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 2006-ம் ஆண்டு தொடக்கி வைத்தார்.
தற்போது அப்பணிகள் முடிந்து பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. புதிய 2-ம் சுரங்க விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக ஆண்டுக்கு 45 லட்சம் டன்கள் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கப்படும். இங்கு வெட்டியெடுக்கப்படும் பழுப்பு நிலக்கரியைக் கொண்டு 500 மெகாவாட் திறன் கொண்ட 2-ம் அனல்மின் விரிவாக்கத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்புதிய சுரங்கத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா ஏப்ரல் 5-ம் தேதி 2-ம் சுரங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜெய்ஸ்வால் கலந்து கொண்டு நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். மத்திய அமைச்சர் வருகையை ஒட்டி நெய்வேலியில் வரவேற்பு ஏற்பாடுகள் விரைவாக நடைபெறுகின்றன. இரு தினங்கள் நெய்வேலியில் தங்கும் மத்திய அமைச்சர் என்எல்சியின் அனைத்துத் தொழிலகப் பகுதிகளையும் பார்வையிட உள்ளார். என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி மேற்பார்வையில் நகர நிர்வாக அதிகாரி சி.செந்தமிழ்செல்வன் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் கடலூர் தொகுதியின் எம்பி கே.எஸ்.அழகிரியும் பங்கேற்கிறார்.
downlaod this page as pdf