கடலூர் :
முன் விரோதம் காரணமாக தி.மு.க., கவுன்சிலரின் தம்பியை கொலை செய்ய வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர்.
கடலூர் முதுநகரில் கடந்த டிசம்பர் மாதம் நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் பனங்காட்டு காலனியைச் சேர்ந்த சிலர் சோனங்குப்பம் வாலிபரை வெட்டி கொலை செய்தனர். இப்பிரச்னையில் இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்தது. சோனங்குப்பம் தி.மு.க., கவுன்சிலரின் தம்பி டிரைவர் பாபு (எ) விஜயகோபால்(35). இவருக்கும் பனங்காட்டு காலனி சுமோ டிரைவர் பாலு என்பவருக்கும் முதுநகர் துறைமுகம் வேன் ஸ்டேண்டில் நேற்று காலை வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாலு தன் நண்பர்கள் டிவேல், அருள், சந்திரமோகன் ஆகியோருடன் (டி.என் 20 ஏ.ஜே 2511) சுமோவில் வந்து பாபுவிடம் மீண்டும் தகராறு செய்தனர்.
அப்போது அங்கு வந்த தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஏட்டு சுதர்சனம் ஆகியோரை பார்த்ததும் பாலு தன் நண்பர்களுடன் தப்பிச்சென்றார். அவர்கள் விட்டுச்சென்ற இரண்டு வீச்சரிவாள் மற்றும் சுமோ காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தகவலறிந்த டி.எஸ்.பி., ஸ்டாலின், முதுநகர் இன்ஸ்பெக்டர் கோபால், சப் இன்ஸ் பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாபு புகாரின் பேரில் முதுநகர் போலீசார் பாலு, வடிவேல், அருள், சந்திரமோகன் ஆகியோரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் சோனங் குப்பத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் முதுநகர் போலீஸ் நிலையம் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.