திட்டக்குடி :
திட்டக்குடி அருகே சாலையோரம் நின்றிருந்த பழமையான புளிய மரம் முறிந்து விழுந்ததால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் மஞ்சமுத்தான் கோவில் அருகில் சாலையோரம் நின்றிருந்த பழமையான புளிய மரம் நேற்று மாலை திடீரென முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திட்டக்குடி சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், விஜய்சங்கர் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று கிராம மக்களுடன் இணைந்து மரத்தினை வெட்டி அகற்றினர். நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் நேற்று மாலை 6.30 முதல் 7.15 வரை விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.