சிதம்பரம்:
வேளாண்மைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க, நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே கேட்டுப் பெற வேண்டும் என தமிழக அரசை தமிழக உழவர் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலர் சி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆள் பற்றாக்குறை, விளைப் பொருள்களுக்கு லாபமற்ற விலை, கூலி உயர்வு, இந்திய அரசின் வேளாண்மைக்கு எதிரான சட்டங்கள் ஆகியவற்றால் நிலைகுலைந்து போயுள்ள விவசாயிகள் மின்தடையால் மேலும் அதிர்ந்து போய் உள்ளனர். மத்திய அரசின் நடுநிலை தவறிய போக்கால் ஆற்று நீர் சிக்கலில் நமது தமிழகத்தின் உரிமையை இழந்து நிற்கும் தமிழக விவசாயிகள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி வேளாண்மை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே வேளையில் வெளிநாட்டு பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் தொடர்கிறது. நாள்தோறும் புதிது, புதிதாக வெளிநாட்டு நிறுவனங்களோடு தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொள்ளும் வண்ணம் உள்ளது. இதன்படி அந்நிறுவனங்களுக்கு சலுகை விலையில் தடையற்ற மின்சாரம் வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது. அசாமில் சலகதி அனல் மின்நிலையத்தில் உற்பத்தியாகும் 750 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் அசாமுக்கே வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. தமிழகத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் உற்பத்தியாகும் 11 கோடி யூனிட் மின்சாரம் கர்நாடகத்துக்கு நாள் தோறும் அனுப்பப்படுகிறது. ஆனால் தமிழருக்கு ஒரு சொட்டு நீர் கூட தரமாட்டோம் என கர்நாடகம் கொக்கரிக்கிறது.
அதுபோன்று ஆற்றுநீரை மறிக்கும் கேரளத்துக்கு 9 கோடி யூனிட் மின்சாரமும், ஆந்திரத்துக்கு 6 கோடி யூனிட் மின்சாரமும் நாள்தோறும் நெய்வேலியிலிருந்து அனுப்பப்படுகிறது. தமிழகத்தின் கடுமையான மின்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு அசாமைப் போல் தமிழக அரசும், நெய்வேலி மின்சாரம் முழுவதையும் மத்திய அரசிடம், தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என கேட்டு பெற வேண்டும் என்று தமிழக உழவர் முன்னணி வலியுறுத்துகிறது என அறிக்கையில் சி.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
downlaod this page as pdf