கடலூர்:
அதிகாரப்பூர்வமற்ற நிலையில் ஐ.நா. சபை உணவுப் பாதுகாப்புக் குழு கடலூர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தைப் பார்வையிட்டதற்கு, சிப்காட் தொழிற்சாலைகள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
ஆலிவர் ஷட்டர் தலைமையிலான மூவர் கொண்ட ஐ.நா.சபையின் உணவு பாதுகாப்புக் குழு, புதன்கிழமை கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையைப் பார்வையிட்டது. தொழிற்சாலைகளால் விளைநிலங்கள், சுற்றுச்சூழல் மீன்பிடித் தொழில் பாதிப்பு குறித்து ஆராய்ந்து கருத்து தெரிவித்ததுடன் ஐ.நா. சபைக்கு அறிக்கை தரப் போவதாகவும் அறிவித்து உள்ளது. மக்கள் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரையும் இக்குழு சந்தித்தது. செய்தியாளர்களுக்கும் பேட்டி அளித்தது. இக் குழு வருகைக்கு கடலூர் சிப்காட் தொழிற்சாலைகள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து சிப்காட் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இந்தர்குமார் வியாழக்கிழமை தெரிவித்தது:
ஐ.நா. சபைக் குழு உறுப்பினர் என்று வருகை தந்த குழுவினர், தாங்கள் அதிகாரபூர்வமற்ற நிலையில் வந்து இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக அவர்கள் சுற்றுலா விசாவில் இந்தியா வந்து இருக்கிறார்கள். சுற்றுலா விசாவில் வந்தவர்கள், தொழிற்சாலைகளைப் பார்வையிடவும், பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கவும், பல்வேறு சங்கப் பிரதிநிகளைச் சந்திக்கவும் அனுமதி அளித்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.15 ஆண்டுகளுக்கு முன் விளைநிலங்கள் இங்கு தொழிற்சாலை வளாகங்களாக மாற்றப்பட்டு உள்ளன. அப்போதைய சந்தை மதிப்பில் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது.÷அதைப் பற்றி இப்போது கருத்து தெரிவிப்பதால் என்ன பயன்? கடற்கரையோரம் மணல் பாங்காகக் கிடந்த நிலங்கள் இன்று தொழிற்சாலை வளாகங்களாக மாறியிருக்கின்றன.
அதிகாரப்பூர்வமற்ற நிலையில் இனி யார் வேண்டுமானாலும் இங்கு வரலாமா அதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்குமா அப்படியானால் தொழிற்சாலைகளின் ரகசியங்கள் காப்பாற்றப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? பல நுறு கோடி செலவில் உருவாக்கப்பட்ட ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு, பாதுகாப்பு அற்ற நிலை உருவாகி இருக்கிறது. இது பற்றி மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டு உள்ளன. இத்தகைய அதிகாரப்பூர்வமற்ற ஆய்வுகள் தடை செய்யப்பட வேண்டும் என்றார் இந்தர்குமார்.
downlaod this page as pdf