உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

நெல்லிக்குப்பம் நகர மன்றக் கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு

நெல்லிக்குப்பம் : 

                    பென்னாகரம் இடைத்தேர்தலில் பணம், அதிகார பலத்தை பயன்படுத்தி ஆளுங்கட்சி வெற்றி பெற்றதை கண்டித்து நகரமன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.

                     நெல்லிக்குப்பம் நகர மன்றக் கூட்டம் சேர்மன் கெய்க்வாட் பாபு தலைமையில் நடந்தது. மேலாளர் சிவசங்கரன், இன்ஜினியர் புவனேஸ்வரி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.மக்கள் நலத் திட்டங்களை ஆதரித்து பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ததற்கு நன்றி. பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள், திருமண உதவி தொகை உயர்த்தியது, கரும்பு டன்னுக்கு இரண்டாயிரம் ரூபாய் அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து பார்த்தசாரதி கூறினார். பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றியதற்கு சேர்மன் நன்றி தெரிவித்து கவுன்சிலர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

                       பென்னாகரம் இடைத் தேர்தலில்  ஜனநாயக விரோதமாக பணம், அதிகாரபலத்தால் ஆளுங்கட்சி வெற்றி பெற்றதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அ.தி.மு.க. கவுன்சிலர் தனசேகரன் வெளியேறினார். சற்று நேரத்தில் மன்றத்திற்கு வந்த தனசேகரன், கடந்த ஒரு மாதமாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றதற்கு, உடன் சரி செய்யப்படும் என சேர்மன் கூறினார். எனது பகுதியில் அதிக குழந்தைகள் இருந்தும் அங்கன்வாடி கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் வகுப்புகள் நடப்பதாக நிர்மலா கூறியதற்கு, விரைவில் கட்டப்படும் என சேர்மன் கூறினார்.

                     அப்போது , கிருஷ்ணன் தெரு பெண்கள், கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டிலில் எடுத்து வந்து சேர்மனிடம் கொடுத்தனர். தங்கள் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. சமயத்தில் புழுவும் வருகிறது. அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. நோய் பரவினால் அதிகாரிகள் தான் பொறுப்பு என ஆவேசமாக கூறினர். அதற்கு சேர்மன், கூட்டம் முடிந்து நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  அதன்படி கூட்டம் முடிந்ததும் சேர்மன், அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு, குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். திருவள்ளுவர் நகரில் அங்கன்வாடி கட்டடம் இல்லாமல் குழந்தைகள் சிரமப்படுவதையும் பார்வையிட்டார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior