உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 21, 2010

ரூ.23 கோடியில் 50 புதிய ஆரம்ப சுகாதார மையங்கள்

     தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.23.83 கோடியில் 50 புதிய ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். 

பேரவையில் ரூ.3,889 கோடி ஒதுக்கீட்டுக்கான மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு அவர் பதில் அளித்தபோது இது தொடர்பாக செய்த அறிவிப்புகளின் விவரம்:
  
            தமிழகத்தில் இப்போது மொத்தம் 1,539 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதில் இந்த அரசு முனைப்புடன் செயல்படுகிறது. 2008-09-ம் ஆண்டில் அறிவித்தபடி, 116 புதிய ஆரம்ப சுகாதார மையங்கள் ரூ.42.59 கோடியில் ஏற்கெனவே தொடங்கப்பட்டன. இவற்றுக்கு சொந்தக் கட்டடங்கள் இப்போது கட்டப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில் (2010-11) தேசிய ஊரக நல்வாழ்வு இயக்ககத்தின் நிதியுதவியுடன் மேலும் 50 புதிய ஆரம்ப சுகாதார மையங்கள் ரூ.23.83 கோடியில் தொடங்கப்படும். 40 ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்துதல்: தமிழகத்தில் இதுவரை கண்டிராத சாதனையாக இரண்டே ஆண்டுகளில் 125 ஆரம்ப சுகாதார மையங்கள், 30 படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார மையங்களாக தரம் உயர்த்தப்பட்டன. இதற்காக தேசிய ஊரக நலவாழ்வு இயக்ககத்தின் நிதி ரூ.66.22 கோடி செலவிடப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்கள் அனைத்துக்கும் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  
           இப்போதுள்ள 257 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு முழுவீச்சுடன் செயல்பட்டு வருகின்றன. இதனால் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மற்றும் சிறு அறுவைச் சிகிச்சைகளை செய்யும் அளவுக்கு நவீன வசதிகளுடன் ஆரம்ப சுகாதார மையங்கள் விளங்குகின்றன. மக்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஆரம்ப சுகாதார மையங்களில் சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. 2009-10-ம் ஆண்டில் 2,694 சிசேரியன் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. எனவே நடப்பு நிதியாண்டில் ஆரம்ப சுகாதார மையங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மேலும் 40 ஆரம்ப சுகாதார மையங்கள் ரூ.40.87 கோடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளன.
144 ஆரம்ப சுகாதார மையங்களில்... தமிழகத்தில் 779 ஆரம்ப சுகாதார மையங்களில் சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுகள் உள்ளன. பொது மக்களிடையே இந்திய முறை மருத்துவத்துக்கு பெருமளவில் வரவேற்பு இருப்பதால், இந்த ஆண்டு ரூ.3.37 கோடியில் 144 ஆரம்ப சுகாதார மையங்களில் இந்திய மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்படும்.
 
              கூடுதல் மருத்துவர் நியமனம்: மக்களுக்கு அளிக்கும் மருத்துவ சேவைப் பணிகளில் தொய்வு ஏற்படாத வகையில் தொடர்ந்து மருத்துவ வசதி அளிக்க ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மையத்திலும் குறைந்தது இரண்டு மருத்துவர்கள் பணியாற்ற வேண்டியது அவசியம். இப்போது 213 ஆரம்ப சுகாதார மையங்களில் ஒரு மருத்துவர் என்ற வீதத்தில் மட்டுமே பணியில் உள்ளார். தேசிய ஊரக நலவாழ்வு இயக்க நிதியிலிருந்து இந்த 213 ஆரம்ப சுகாதார மையங்களிலும் கூடுதலாக ஒரு மருத்துவர் நியமனம் செய்யப்படுவார். ரூ.25 கோடியில்....ஆரம்ப சுகாதார மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.25.50 கோடி செலவிடப்படும். கடந்த நிதியாண்டில் ரூ.20.38 கோடியில் ஆரம்ப சுகாதார மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. நடப்பு நிதியாண்டில் ஆரம்ப சுகாதார மையத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு ரூ.18 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், 48 ஆரம்ப சுகாதார மையங்களை ரூ.2.5 கோடியில் தர நிர்ணய மேம்பாடு செய்தல், ரூ.5 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வழங்குதல் என மொத்தம் ரூ.25.50 கோடி செலவிடப்படும்'' என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior