'ஹிதேந்திரன் உறுப்பு தானத்துக்கு பின் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, இதுவரை மூளைச் சாவு ஏற்பட்ட 86 பேரிடம் இருந்து, 479 பேர் உறுப்பு தானம் பெற்று பயனடைந்துள்ளனர்' என்று, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சுகாதாரத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அளித்த பதில்:
அரசு மருத்துவமனைகளில் வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக பேசினர். கர்ப்பிணிகளுக்கு 6,000 ரூபாயை தாய்வீட்டு சீதனமாக கொடுத்து வருபவர் முதல்வர் கருணாநிதி. இளம் சிறார்கள் இதய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 3,290 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஏற்கனவே உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகளுடன், புதிதாக கட்டப்படும் ஐந்து கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. அதேபோல, இந்தியாவிலேயே அதிகமாக 1,519 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழகத்தில் தான் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை துவக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது.
ஹிதேந்திரன் மூளைச்சாவு ஏற்பட்டு, உடல் உறுப்பு தானம் செய்த பின், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதுவரை, 86 பேர் மூளைச்சாவு ஏற்பட்டு, உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளது. 18 பேருக்கு இதயம், 24 பேருக்கு கல்லீரல், 126 பேருக்கு விழித்திரை என, உடல் உறுப்பு தானத்தால் 479 பேர் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலேயே இதய மாற்று அறுவை சிகிச்சை சென்னை அரசு மருத்துவமனையில் தான் நடந்துள்ளது. அதேபோல, ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அந்தளவு உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் தான், இவை எல்லாம் சாத்தியமாயின. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக