உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 21, 2010

31 மாவட்டங்களில் யோகா மகப்பேறு பிரிவு

                    தமிழகத்தில் 31 மாவட்டங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் மகப்பேறு மருத்துவப்பிரிவு தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
பேரவையில் தனது துறையின் மானியக் கோரிக்கை விவாதத்துக்கு செவ்வாய்க்கிழமை பதில் அளித்தபோது இது தொடர்பாக அவர் கூறியதாவது:

             ""சுகப் பிரசவத்துக்கு யோகா மருத்துவ முறை சிறந்ததாக விளங்குகிறது. தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் ரூ.59.19 லட்சம் செலவில் 31 மாவட்டங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் மகப்பேறு பிரிவு தொடங்கப்படும்
 
             சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு சித்த மருந்துப் பெட்டகம்: சிக்குன்குன்யா காய்ச்சல் நிவாரணத்துக்கு சித்த மருந்துகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. சிக்குன்குன்யா காய்ச்சலுக்கான நான்கு சிறந்த சித்த மருந்துகளைக் கொண்ட மருந்துப் பெட்டகத்தை டாம்ப்கால் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
இந்தப் பெட்டகங்கள் டாம்ப்கால் விற்பனை மையங்களிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் மருத்துவர் ஆலோசனைப்படி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
 
              13 மூலிகைகள் கொண்ட இருமல் மருந்து: பொது மக்களின் தேவைக்கேற்ப இருமல், சளி மற்றும் பொதுவான நோய்களுக்கு டாம்ப்கால் நிறுவனம் மருந்து தயாரித்து வருகிறது. இந்த மருந்துகள் பொது மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதையடுத்து 13 மூலிகைகள் கொண்ட புதிய இருமல் மருந்தை டாம்ப்கால் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மருந்து 100 மில்லி லிட்டர் அளவுள்ள கையடக்க புட்டிகளில் விநியோகிக்கப்படும். அரசு மருத்துவமனைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படும். திருச்சி, சேலம், கோவையில் ஹோமியோபதி பிரிவு: ஹோமியோபதி மருந்துகள் பக்க விளைவுகள் அற்றதும், மலிவான விலையில் கிடைக்கக் கூடியதும் ஆகும். ஹோமியோபதி மருத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

                தமிழகத்தில் மாவட்ட மருத்துவமனைகள், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் இப்போது 38 ஹோமியோபதி மருத்துவப் பிரிவுகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் திருச்சி, சேலம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.28.05 லட்சம் செலவில் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்கப்படும்.
 
                 இந்திய மருந்து ஆய்வுக்கு தனி மையம்: இப்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் டாம்ப்கால் நிறுவனம், பல வகையான சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துகளை சாஸ்திர முறைப்படியும் புதிய கலப்பு முறைப்படியும் தயாரித்து வருகிறது. தற்கால தேவைக்கு ஏற்ப, புதிய கலப்பு மருந்துகளை நல்ல தரத்தில் தயாரிக்கும் நோக்கத்தில் டாம்ப்கால் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு என ஒரு தனி மையம் நடப்பாண்டில் உருவாக்கப்படும். வண்டலூர் உயிரியல் பூங்காவில்... இப்போது டாம்ப்கால் நிறுவன விற்பனைப் பிரிவு சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக 65 வகையான மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

            இந்த நிறுவனத்தின் மருந்துகளுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரு விற்பனைப் பிரிவு தொடங்கப்படும்'' என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior