உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

பிளஸ் 2 மறுதேர்வு வினாத்தாள் கடினம்: முசிறி மாணவர்கள் புலம்பல்


General India news in detail

                திருச்சி மாவட்டம் முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று இயற்பியல் பாடத்துக்கான மறுதேர்வு நடந்தது. கடந்த தேர்வை விட, இம்முறை, வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் புலம்பினர்.

                    கடந்த மார்ச் 8ம் தேதி முசிறி அரசு மேல்நிலைப் பள்ளியில், முசிறி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 101 மாணவர்கள், தண்டலைப் புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 84 மாணவர்கள், அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 77 மாணவர்கள் இயற்பியல் தேர்வெழுதினர். அவர்களின் விடைத்தாள்களுடன், பொருளியல் தேர்வெழுதிய ஐந்து மாணவர்களின் விடைத்தாள்களும் சேர்த்து, ஒரு பார்சலில் கட்டப்பட்டது. முசிறி தபால்துறை அலுவலகம் மூலம், அன்று மாலை பஸ்சில் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பார்சல் மாயமானது. 'இயற்பியல் பாடத்துக்கு மட்டும் வரும் 22ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும்' என்று தமிழக அரசு அறிவித்தது.

                    முசிறி அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று காலை 8 மணியில் இருந்து மாணவர்கள் வரத் துவங்கினர். ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்படி, மாணவர்களுக்கு காலை 9 மணிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தேர்வுத்துறை இணை இயக்குனர் கருப்பசாமி, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர், தேர்வை பதட்டமில்லாமல் எதிர்கொள்வது; பதட்டத்தை தணிப்பதற்கான வழி; தேர்வறையில் ஒழுக்கத்துடன் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து, மாணவர்களிடையே விளக்கினர். நேற்று 180 மாணவர்கள், 82 மாணவியர் என, 262 பேரும் தேர்வெழுதினர். 10 மணிக்கு தேர்வு துவங்கியது. வினாத்தாளை படிக்க 10 நிமிடமும், விடைத்தாள் விவரங்களை நிரப்புவதற்கு 15 நிமிடமும் ஒதுக்கப்பட்டது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிந்தது.

தேர்வுக்குப்பின், தேர்வுத்துறை இணை இயக்குனர் கருப்பசாமி, கூறியதாவது: 

                       எதிர்பாராத சில சம்பவங்களினால் தற்போது மறுதேர்வு எழுதும் நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற தவறு நடக்காவண்ணம், அரசு அளிக்கும் ஆலோசனைப்படி செயல்படுவோம். முசிறியில் நடந்த மறுதேர்வு வினாத்தாள் அனைத்தும், தனிநபர் பாதுகாப்புடன் விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த மார்ச்  மாதம் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியாகும் அன்றே, இம்மாணவர்களுக்கும் முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு கருப்பசாமி கூறினார். மறுதேர்வு குறித்து மாணவர்கள் கூறுகையில், 'ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தது. ஆனால், 10 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தது. சென்ற தேர்வில் பெற இருந்த மதிப்பெண்ணை விட, இத்தேர்வில் குறைவாகத்தான் பெறுவோம்' என்று புலம்பினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior