கடலூர்:
மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ரூ.12.5 லட்சம் மோசடி செய்ததாக, கடலூர் எஸ்.பி.யிடம் வியாழக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.
கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் 5 மகளிர் சுய உதவிக் குழுக்களின் பிரதிநிதிகள் எஸ்.பி.யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது:
குறிஞ்சிப்பாடியை அடுத்த எல்லப்பன்பேட்டையில் 5 மகளிர் சுய உதவிக் குழுக்கள், குறிஞ்சிப்பாடியில் இயங்கி வரும் தொண்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் இந்தியன் வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கி 5 ஆண்டுகளாக முறையாகச் செயல்பட்டு வருகின்றன. எனவே 6 மாதங்களுக்கு முன், தொழில் தொடங்குவதற்கான கடனாக அந்த வங்கியில் இருந்து தலா ரூ. 2.5 லட்சம் வழங்கப்பட்டது. 5 மகளிர் சுய உதவிக் குழுக்களும் தலா ரூ. 50 ஆயிரம் கொடுத்தால், வங்கிக் கடனில் பாதியை மானியமாக மாற்றித் தருவதாக தொண்டு நிறுவன மேலாளர் தெரிவித்தாராம். அதை நம்பிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் தலா ரூ.50 ஆயிரம் வழங்கின. இதற்காக மேலாளர் வழங்கிய ரசீது போலியானது என்று பின்னர் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் கேட்டதற்கு, வங்கி வழங்கிய கடன் தொகையை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கொடுக்க முடியாது என்று தெரிவித்து விட்டாராம். அத்துடன் சுய உதவிக் குழுக்கள் மீது வழக்குத் தொடரப் போவதாகவும் தொண்டு நிறுவன மேலாளர் மிரட்டி வருகிறாராம். இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தருமாறும் மனுவில் கோரி உள்ளனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக