உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

நீண்ட நாள் கனவு நனவாகிறது: விழுப்புரம் மயிலாடுதுறை இடையே இன்று முதல் பயணிகள் ரயில்கள் இயக்கம்


விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில் பாதையில் இயக்கப்பட்ட சோதனை ரயில்
  
கடலூர்:
 
                                    விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில்பாதையில் உயர் நீதிமன்ற கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைவதால், ஏப்ரல் 23-ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. கடலூர், விழுப்புரம், நாகை மாவட்ட மக்களின் கடந்த மூன்றரை ஆண்டு கனவு இன்று நனவாகிறது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ. தூரத்தில் ரூ.270 கோடி செலவில் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையொட்டி விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மீட்டர் கேஜ் பாதையில் ஓடிக் கொண்டிருந்த பயணிகள் ரயில்கள் 2006 டிசம்பர் 1-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. 
 
                  ரயில்வே பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்ட பின்னர் இரும்பு மற்றும் தளவாட பாகங்களின் விலை உயர்வினால் ரயில்வே பணி டெண்டர் எடுத்தவர்கள் பணியை விட்டு விட்டு சென்று விட்டனர். அதன் பின்னர் ரயில்வே பாதை அமைக்கும் பணியை ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் பொறுபேற்று டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் இணைந்து பணியை தொடங்கியது. ரயில்வே பாதை அமைக்கும் கூடுதலாக நிதியும் ஒதுக்கப்பட்டது.கெடிலம், பெண்ணையாறு, வெள்ளாறு, கொள்ளிடம் ஆகிய 4 பெரிய ஆறுகளின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியில் பாதை அமைக்கும் பணி தாமதமானது. விழுப்புரம் அருகே பெண்ணையாற்றில் 700 அடி நீள பாலமும், கெடிலம் ஆற்றில் 1600 அடி நீள பாலமும், பரங்கிப்பேட்டை அருகே வெள்ளாற்றின் குறுக்கே 800 அடி நீள பாலமும், சிதம்பரம் அருகே கொள்ளிடத்தில் 2100 அடி நீள பாலமும் கட்டப்பட்டுள்ளன. மேலும் 128 சிறிய பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.ஆமை வேகத்தின் நடைபெற்று வந்த ரயில்வே பாதை அமைக்கும் பணியினால் ஓராண்டுக்குள் பணி முடிக்க இயலாமல் போனது. முதல் கட்டமாக சீர்காழி - மயிலாடுதுறை இடையே 22 கி.மீ. தொலைவில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.2-வது கட்டமாக விழுப்புரம் - கடலூர் இடையே 48 கி.மீ. வரை பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்த கடந்த மே மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர் 3-வது கட்டமாக கடலூர் - சீர்காழி வரை 52 கி.மீ. பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததும் ஜூலை 31-ல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.ரயில்வே பாதை அமைக்கும் பணி முடிந்தாலும் சிக்னல், பிளாட்பாரம், ரயில் நிலையக் கட்டடங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படாததால் ரயில்கள் இயக்குவது தாமதம் ஏற்பட்டது. 
 
                      குறிப்பாக சிதம்பரம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள், பயணிகள் பாதையை கடந்து செல்லும் மேம்பாலம் மற்றும் நடைமேடை, கழிப்பறை அமைக்கும் பணி ஆகியவை இன்னும் முற்றுப் பெறாமல் உள்ளது.இதுபோன்று 15 ரயில் நிலைய கட்டடங்களில் இன்னும் 30 சதவீத பணிகள் முடிவு பெறாமல் உள்ளது. புதிய அகல ரயில்வே பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் 4 மாதங்கள் கழித்து தற்போது மயிலாடுதுறையைச் சேர்ந்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், வழக்கறிஞர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான கே.ராஜேந்திரன் உடனடியாக பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு 2 நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்சில் மார்ச் 5-ம் தேதி முதல் விசாரணைக்கு வந்தது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மூன்றரை ஆண்டுகள் பாதை அமைக்கப்படும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது.எனவே மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்க வேண்டும் என வழக்கறிஞர் கே.ராஜேந்திரன் கோரினார்.இந்நிலையில் மீண்டும் மார்ச் 15-ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பயணிகள் ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்பதை இறுதிகட்டமாக நீதிமன்றத்தில் ரயில்வே நிர்வாகம் தெரிவிக்க உத்தரவு பிறப்பித்தது.அதையடுத்து ரயில்வே நிர்வாகம் மார்ச் 23-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வார கெடுவுக்குள் பயணிகள் ரயில்களை இயக்குவதாக தெரிவித்தது. ரயில்வே துறை அளித்த உறுதிமொழிபடி அதிகாரிகள் செயல்படுவார்கள் என நம்புகிறோம் என நீதிபதி தெரிவித்தனர்.
 
                     இந்நிலையில் காலக்கெடு தேதி நெருங்கியும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படவில்லை. எனவே ரயில்வே நிர்வாகம் மீது நஷ்டஈடு கோரப்படும் என வழக்கறிஞர் கே.ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் இந்த காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைவதால் அவசர, அவசரமாக விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே பயணிகள் ரயிலை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 23) முதல் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 
                     இந்தியாவில் ரயில் சேவை 1853ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 1856ம் ஆண்டு,  'சென்னை ரயில்வே கம்பெனி' என்ற பெயரில் தென்னக ரயில்வே துவங்கியது. இந்த தென்னக ரயில்வேயில் இயக்கப்பட்ட 'போட் மெயில் சர்வீஸ்' என்ற சென்னை - ராமேஸ்வரம் (விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக) எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தகவல் தொடர்பிறகு பெரும் உதவியாக இருந்தது.

                   குறிப்பிட்ட நேரத்திற்குள் கடிதங்கள் சென்றாக வேண்டும் என்பதால் தினமும் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கும், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கும் இடைநில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலில் பயணிகளும் சென்று வந்த நிலையில், 'போட் மெயிலுக்காக' தனி பெட்டிகள் இணைக்கப்பட்டன.

                     இலங்கையில் இருந்து பயணிகள் தனுஷ்கோடி வரை கப்பல் மூலம் வந்து அங்கிருந்து, 'போட் மெயில்' ரயில் மூலம் சென்னைக்கும், சென்னையிலிருந்து ரயில் மூலம் தனுஷ்கோடி சென்று அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கைக்கும் சென்றனர். கப்பலில் செல்வதற்கான கட்டணமும் ரயில்வே நிர்வாகமே வசூலித்தது. சென்னை - ராமேஸ்வரம் (விழுப்புரம் - கடலூர் - சிதம்பரம் - மயிலாடுதுறை வழி) ரயில் பாதை சென்னை முதல் விழுப்புரம் வரையிலும், மயிலாடுதுறையிலிருந்து ராமேஸ்வரம் வரையிலும் சில ஆண்டுகளுக்கு முன் அகலப் பாதையாக மாற்றப்பட்டது.
 

            விழுப்புரம் முதல் மயிலாடுதுறை வரை, 'மீட்டர் கேஜ்' ஆக இருந்ததால் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் ரயில் பயணம் செய்ய பெரும் சிரமத்திற்குள்ளாயினர். மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, விழுப்புரம் - மயிலாடுதுறை வரையிலான 122 கிலோ மீட்டர் தூர 'மீட்டர் கேஜ்' பாதையை  அகல பாதையாக மாற்ற கடந்த 2006ம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதையொட்டி, அதே ஆண்டு டிசம்பர் மாதம் இப்பாதையில ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அகலப் பாதை பணியை கடந்த 2007ம் ஆண்டு ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்.வி.என்.எல்.,) நிறுவனம் 270 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் துவங்கியது. மூன்று பகுதியாக நடந்த இப்பணியில் 31 பெரிய பாலங்கள் உட்பட 380 பாலங்கள், ஆளில்லாத 48 கேட்கள், ஆட்கள் உள்ள 52 கேட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 

              இப்பாதையில் ரயில் 2009 ஜூன் 30ம் தேதி இயக்கப்படும் என 2007 மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய ரயில்வே துறை இணை அமைச்சராக இருந்த வேலு தெரிவித்தார். கொள்ளிடம் பாலம் முடிக்க காலதாமதமானதால் அதே ஆண்டு டிசம்பரில் ஓடும் என்றனர். ஆனால், பயணிகள் ரயில் இயக்குவதில் தாமதம் நீடித்தது. தற்போது ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டன. ரயில்வே நிலையங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. சிக்னல், கிராசிங் பாயின்ட்கள் என நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, கோடை காலமாக இருப்பதால் பள்ளி விடுமுறையில் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர மத்திய அரசு பல பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வரிசையில் இன்று முதல் விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் இயங்கும் ரயிலும் இடம் பெறும்.

பயணிகள் ரயில் அவசரமாக இயக்கும் பின்னணி : 

                          சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி இன்றுடன் கெடு முடிவதால் விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. மயிலாடுதுறை பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், விழுப்புரம் - மயிலாடுதுறை பாதையில் உடனடியாக ரயில் இயக்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடாக மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த மார்ச் 5ம் தேதி டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் எலிப் தர்மராஜ், சசிதரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அதில், டில்லி ரயில்வே துறை செயலக அதிகாரி மற்றும் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆகியோர் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜராகி மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு  ரயிலை இயக்க முடியாது. அந்த பாதையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே, விரைவில் மயிலாடுதுறை - விழுப்புரம் வழியாக ரயில் இயக்கப்படும் என உறுதியளித்தனர்.

                      பின், வழக்கு மீண்டும் 19ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை நேரில் ஆஜராகி உறுதியான வாக்குமூலம் தெரிவிக்க வேண்டும் என, நீதிபதிகள் தெரிவித்தனர். 23ம் தேதி நடந்த விசாரணையில், நான்கு வாரத்திற்குள் விழுப்புரம் - மயிலாடுதுறை பாதையில் ரயில் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர். இதற்கிடையே அறிவித்த தேதிபடி ரயில் இயக்கவில்லையெனில், கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும்  என, ரயில்வே அதிகாரிகளுக்கு வக்கீல் ராஜேந்திரன் பதிவு தபால் மற்றும் தந்தி மூலம் நோட்டீஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில், இன்றுடன்(ஏப்., 23ம் தேதி) ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த கெடு முடிவடைவதால், ரயில்வே நிர்வாகம் விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் பயணிகள் ரயிலை இயக்க ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior