சிதம்பரம்:
காட்டுமன்னார்கோவில் அருகே வடவாற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் தேடி கண்டெடுத்தனர். சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வடவாறு வழியாக 2 ஆயிரம் கனஅடி வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் உடையார்குடியைச் சேர்ந்த ஆசிரியர் பவுல்சுந்தர் ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி கீதாரீத்தா, லெஸ்லி டிமெல்லோ என்ற மகன் மற்றும் இரு மகள்களுடன் அருகே உள்ள வடவாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். மகன் லெஸ்லி டிமெல்லா கடலூர் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த லெஸ்லி டிமெல்லோவிற்கு தந்தை பவுல்சுந்தர் நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது வடவாற்றில் அதிகமாக வந்த தண்ணீரில் இருவரும் அடித்துச் சென்றனர். அப்போது கரையில் இருந்தவர்கள் ஆசிரியர் பவுல்சுந்தரை காப்பாற்றினர். ஆனால் மகன் லெஸ்லி டிமெல்லோ தண்ணீரில் மூழ்கியதால் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்புத் துறையினர் வந்து விடிய விடிய தேடி வடவாற்றிலிருந்து திங்கள்கிழமை அதிகாலை மாணவர் உடலை கண்டெடுத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக