ஜல்லிகள் குவித்து வைக்கப்பட்டுள்ள மேல்பாப்பனப்பட்டு சாலை.
நெய்வேலி:
நெய்வேலி ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் சாலைப் பணிகள் முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நெய்வேலி ஊராட்சி கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ளது. நெய்வேலி ஊராட்சியில் இருந்து மேல்பாப்பனப்பட்டு கிராமம் வரை பிரதம மந்திரியின் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.51.71 லட்சம் செலவில் 1.7 கி.மீ நீளமுள்ள கான்கிரீட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டதையடுத்து, முதனைக் கிராமத்தைச் சேர்ந்த கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் நிறுவனம் ஒன்று ஒப்பந்ததாரராக நியமனம் செய்யப்பட்டது. இச்சாலை 27.05.09 முதல் 23.03.10 தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் எனவும் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால் சாலை அமைக்கும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டு தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. சாலை அமைப்பதற்கான கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டு 5 மாதங்களாகியும் இதுவரை ஜல்லி நிரப்பப்படாமல் உள்ளது. மேலும் சாலையின் துவக்கத்திலிருந்து 300 மீட்டர் வரையே சாலைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எஞ்சிய சாலைப் பகுதியில் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள படி கப்பியோ, ஜல்லியோ இதுவரை போடப்படவில்லை. ஆனால் சாலை முடிவடையும் பகுதியில் 200 மீ நீளத்துக்கு கப்பிகள் கொட்டப்பட்டுள்ளன. மேலும் சாலை அமைப்பதற்கான ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் இதுவரை சாலைப் பணிகள் நிறைவடையவில்லை.
இது குறித்து ஒப்பந்த நிறுவன உரிமையாளர் கிருஷ்ணகுமார் கூறுகையில்,
"நாளையே பணிகள் தொடங்கிவிடும்" என்றார். ஆனால் இதுவரை அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
"கான்கிரீட் சாலை அமைக்கிறேன் என்று கூறிவிட்டு, ஒழுங்காக இருந்த சாலையில் வெறும் கப்பியையும் செம்மண்ணையும் கொட்டி, புழுதி பறக்கச் செய்திருக்கிறார்கள். இதனால் வீடு முழுவதும் செம்மண் புழுதிதான் படர்ந்துள்ளது. துணியைக் கூட உலர வைக்க முடியவில்லை' என்றனர். கிடப்பில் உள்ள பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தை நிறைவுபெறச் செய்ய மாவட்ட ஆட்சியர் உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக