உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 11, 2010

மயிலாடுதுறை - விழுப்புரம் இடையேரயில் போக்குவரத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பு

                  மயிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடந்தது. மத்திய அமைச்சர்கள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

                  மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே 122 கி.மீ., தூரம் மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கப்பட்டு, கடந்த மாதம் 23ம் தேதியில் இருந்து இப்பாதையில் ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. முறைப்படி இப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது.

                        மத்திய ரயில்வே இணை அமைச்சர் அகமது தலைமை வகித்தார். மத்திய அமைச்சர் வாசன் அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து, இப்பாதையில் சிறப்பு ரயிலை இயக்கி வைத்தார். மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கம், எம்.பி.,க்கள் மணிசங்கர் அய்யர், ஓ.எஸ்.மணியன், அழகிரி, ஆனந்தன், கலெக்டர் முனியநாதன், எம்.எல்.ஏ., ராஜகுமார், நகராட்சித் தலைவர் லிங்கராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷன் வரவேற்றார்.

மத்திய அமைச்சர் வாசன் பேசியதாவது:

                      ரயில்வே துறை வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். ஐ.மு., கூட்டணி அரசு சிறப்பாகச் செயல்பட்டு, ரயில்வே வளர்ச்சிக்கு பாடுபடுகிறது. இவ்வாண்டு ரயில்வே பட்ஜெட்டில், 41 ஆயிரத்து 426 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 1,148 கோடி ரூபாய் அதிகம். விரைவில் ஏழு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன.சென்னை ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையை நவீனமயமாக்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் புதிதாக ரயில்வே அகடமி துவங்கப்படும். புதிதாக 10 ரயில்வே மருத்துவமனைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

                      காஷ்மீர் - கன்னியாகுமரி, டில்லி ஜும்மா மசூதி - நாகூர் தர்கா, மும்பை தேவாலயம் - வேளாங்கண்ணி தேவாலயம் ஆகியவைகளை இணைக்கும் வகையில், ரயில்வே பணிகள் நடந்து வருகின்றன. இந்த இணைப்பு, தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும்.மத்திய அரசு, கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் ஒட்டு மொத்த கட்டுமான வளர்ச்சிக்கு, ஒரு லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய அமைச்சர் வாசன் பேசினார்.

மத்திய இணை அமைச்சர் அகமது பேசியதாவது:

                   சமீப ஆண்டுகளாக, பல முக்கிய ரயில் பாதை திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதன் மூலம், தெற்கு ரயில்வே பிரிவில் பல இடங்களுக்கு நேரடி தொடர்பு ஏற்பட்டுள்ளது. பயணிகளையும், பொருட்களையும் ஏற்றிச் செல்லும் திறன் அதிகரித்துள்ளது.ரயில்வே துறைக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. ஆனால், கையிருப்பில் 11 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. திட்டக் கமிஷனில் ரயில்வே வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

                     தற்போது போத்தனூர் - கோவை, வேலூர் - விழுப்புரம் அகல ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன. இவ்விரு பாதையிலும் விரைவில் ரயில் போக்குவரத்து துவங்கும். மதுரை - கொடைக்கானல் இடையே இரு வழி பாதை பணி துவங்கப்பட்டுள்ளது. நாகை - வேளாங்கண்ணி புதிய அகல ரயில் பாதையில், வரும் ஜூன் மாதம் ரயில் போக்குவரத்து துவங்கும்.இவ்வாறு மத்திய இணை அமைச்சர் அகமது பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior