கடலூர்:
பிரபல செல்ஃபோன் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்ட கார்கள் மோசடி செய்யப்பட்டு உள்ளன. வாடகையும் வரவில்லை. கார்களையும் காணவில்லை.
பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர்கள் 17 பேரும் செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீûஸ சந்தித்து புகார் மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தெள்ளாறைச் சேர்ந்தவர் ரவி (50). அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். வந்தவாசி அரசு போக்குவரத்துக் கழக அதிமுக தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் கடலூர் வந்து, பிரபல செல்ஃபோன் நிறுவனங்களுக்கு வாடகைக்குக் கார் வேண்டும். ஓட்டுநர் தேவையில்லை. மாதம் ரூ. 10 ஆயிரம் வாடகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதை நம்பி நாகராஜன், ஜனார்த்தனன், ரங்கன் உள்ளிட்ட 17 பேர் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு, கார்களை (10 சுமோ, 2 அம்பாசிடர், 5 இண்டிகா) அளித்தனர்.
கார் வழங்கிய இரு மாதங்களுக்கு சிலருக்கு வாடகை வழங்கப்பட்டது. பின்னர் வழங்கவில்லை. ஓட்டுநர் ரவியைச் சந்தித்து கேட்டதற்கு, விரைவில் வழங்குவதாகத் தெரிவித்தாராம். பின்னர் விசாரித்ததில் கார்கள் இருக்கும் இடமும் தெரியவில்லை. வாடகையும் வரவில்லை. ஏமாற்றப்பட்ட 17 பேரும் செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். வாடகைக்குக் கார்களை வாங்கிச் சென்ற ஓட்டுநர் ரவி அவற்றை மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் அடமானம் வைத்துக் கடன்பெற்று இருப்பதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில் ஓட்டுநர் ரவி நெருக்குதல் காரணமாக திங்கள்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக