உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

கடலூர் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

கடலூர்:

               கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நபராக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தகவல்களை வழங்கினார்.

                2011 பிப்ரவரி 28-ம் தேதி நள்ளிரவு 00 மணியைத் தகுதி நாளாகக் கொண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. கணக்கெடுக்கும் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கு வருவோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் மட்டுமே தகவல்களை அளிக்க, பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் முதல் நபராக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், கணக்கெடுக்கும் ஊழியர்களிடம் தகவல்களை அளித்து இப்பணியைத் தொடங்கி வைத்தார்.   

பின்னர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கூறியது:

                 கடலூர் மாவட்டம் 4,121 கணக்கெடுக்கும் பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. 4029 பேர் கணக்கெடுக்கும் பணியாளர்களாகவும், 672 பேர் மேற்பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆவணங்களை வைத்துக் கொள்ள, இவர்களுக்கு கிட் ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. இரு வகைப் படிவங்களை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு 35 வினாக்கள் உள்ள படிவமும், தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிக்கு 14 வினாக்கள் கொண்ட படிவமும் வைத்து இருப்பர்.

               ஒவ்வொருவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக, தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிக்குத் தகவல் சேகரிக்கப்படுகிறது. மக்கள் சரியான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். தவறான தகவல்களை அளித்தால் தண்டனைக்கு உரிய குற்றமாகும். 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்பது இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் சிறப்பம்சமாகும்.

             தற்போதைய கணக்கெடுக்கும் பணி 15-7-2010ல் முடிவடையும். கணக்கெடுப்பில் தகவல்கள் அளிக்கப்பட்டதும், ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். இதைக் கண்டிப்பாக கேட்டுப் பெறவேண்டும், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பின்னர்  இதைக் காண்பித்தால்தான் அடையாள அட்டையைப் பெறமுடியும் என்றார் ஆட்சியர்.

விருத்தாசலம்:

                 விருத்தாசலத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விருத்தாசலத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நகர்மன்ற தலைவர் வ.க.முருகன் வீட்டிலிருந்து தொடங்கியது. கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் ஜெயராமன், வருவாய் அலுவலர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்வரன், நகராட்சி ஆணையர் திருவண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர். கணக்கெடுப்பின் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior