
கோடை விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள். (இடது படம்) சமச்சீர் கல்வி திட்டம் தொடங்கியதை முன்னிட்டு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.
சிதம்பரம்:
சமச்சீர் கல்வி பாட நூல்களுக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எழுந்துள்ளது.இந்த கல்வி ஆண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடநூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நூல்கள் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி திறந்த நாளான செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. பாட நூல்கள் வண்ணப் படங்களுடன் மாணவர்கள் ஆர்வமுடன் பயிலும் வகையில் அச்சிடப்பட்டுள்ளன. 6-ம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் உரைநடை பகுதியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா., சுவாமி விவேகானந்தர், தந்தை பெரியார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மேரிகியூரி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ளது. தமிழ் இலக்கணம் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் பாட நூலில் டிஸ்கவரி, மிதிவண்டி, மாணவர்-ஆசிரியர் உரையாடல், கிராமிய நடனங்கள், உள்ளிட்டவை படங்களுடன் இடம்பெற்றுள்ளன.கணித நூலில் மாதிரி கணக்குகள், செயல்திட்டம் மற்றும் பயிற்சி கணக்குகள் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இடம் பெற்றுள்ளன. அறிவியல் நூலில் தாவரங்களின் உலகம், செல்லின் அமைப்பு, உயிரினங்களின் அமைப்பு, உணவுமுறை, சுற்றுச்சூழல், அன்றாட வாழ்வில் வேதியியல், அளவீடுகளும் இயக்கமும், காந்தவியல், ஆற்றலின் வகைகள், ஒளியியல் உள்ளிட்டவை வண்ணப் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.சமூக அறிவியல் நூலில் டாக்டர் முத்துலட்சுமி வாழ்க்கை வரலாறு, பூமியும் சூரியக் குடும்பமும், சமணமும் பௌத்தமும் உள்ளிட்ட பாடங்கள் வண்ணப் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக