நெய்வேலி:
என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை இன்று முடியும், நாளை முடியும் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருந்து 6 மாதங்களாகிவிட்ட நிலையிலும் இதுவரை ஒப்பந்தம் ஏற்படாததால் தொழிலாளர்கள் விரக்தியின் உச்சத்துக்கே சென்று, எங்களுக்காக தொழிற்சங்கங்கள் பேசியது போதும், நிர்வாகமே தானாக வழங்கினால் கூட பரவாயில்லை என்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
01-01-2007 முதல் என்எல்சி தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தில் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் கடந்த 6 மாதமாக நெய்வேலி மற்றும் சென்னையில் பலச்சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க வகையில் சில முன்னேற்றங்களை கண்ட போதிலும் அலவன்சு மற்றும் இன்கிரிமென்ட் ஆகியன முன்தேதியிட்டு பெறுவதில் தொழிற்சங்கங்கள் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.÷ஆனால் நிர்வாகமோ ஒப்பந்தம் ஏற்படக்கூடிய தினத்திலிருந்தே வழங்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி மே 29-ல் நிர்வாகத்திடம் ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கியுள்ளது.இதையடுத்து நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே சமரச முயற்சி ஏற்படுத்தும் விதமாக மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் ஜூன் 11-ல் நடந்த பேச்சில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.÷இதையடுத்து திங்கள்கிழமை மீண்டும் நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகத்தில் பேச்சு நடைபெறவுள்ளது. ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கி 15 தினங்களுக்கு மேலானதால், தொழிற்சங்கங்கள் எந்நேரத்திலும் ஸ்டிரைக் அறிவிக்க நேரிடும் என்பதால், நிர்வாகம் ஜூன் 14 முதல் ஊழியர்கள் எவருக்கும் விடுப்பு அளிக்கக் கூடாது துறைவாரியாக மேலாளர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
இந்நிலையில் தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடிவு தெரியாமல் நீண்டு கொண்டு செல்லும் வேளையில், அதிகாரிகளுக்கான ஊதியமாற்று ஒப்பந்தம் முடிவுற்று அவர்கள் கடந்த ஓராண்டாக 6-வது ஊதியக் குழு பரிந்துரையின் பேரில் புதிய ஊதியம் பெற்று வருகின்றனர். மேலும் ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் சிறப்பு ஊதியமாக பணிச் செயல்பாடுகளுக்கேற்ப ஊதியத்தையும் ஜூன் 11-ல் பெற்றுள்ளனர். இவ்வாறாக அதிகாரிகள் தொடர்ந்து பணப்பயன் பெற்றுவரும் வேளையில், அவர்களுக்கு கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன்கள் கானல் நீராகி வருவது கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தற்போதைய நிலையில் ஊதியமாற்று ஒப்பந்தம் ஏற்படுகிறதோ இல்லையோ, நிர்வாகம் தானாகவே முன்வந்து வழங்கினால்கூட அதைப் பெற்றுக் கொள்ளும் நிலைக்கு தொழிலாளர்கள் தயாராகியுள்ளனர். தொழிற்சங்கங்கள் விரைந்து விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக