உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 15, 2010

தடைக்காலத்துக்குப் பின்னும் மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றம்


கடலூர் நகரத் தெருக்களில் அதிக அளவில் விற்பனை ஆகும், ஏரி, குளங்களில் பிடிக்கப்படும் மீன்கள்.
கடலூர்:
 
                 கடலூர் மாவட்டத்தில் 45 நாள்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்த காலம் முடிவடைந்து, மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் கிடைக்க வில்லை என்று, மீனவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
 
                 இனப்பெருக்கக் காலம் என்பதால், ஏப்ரல் 15-ம் தேதி முதல், 45 நாள்கள் கடலில் மீனபிடிக்க பெரிய இயந்திரப் படகுகளுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகளும், 700 பெரிய விசைப் படகுகளும் உள்ளன. மீன்பிடித் தடைகாலம் முடிந்து, மே 29-ம் தேதி கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.÷முதல் நாளன்று மத்தி மீன்கள் ஏராளமாகக் கிடைத்தன. அதைத் தொடர்ந்து மத்தி மீன்கள் அவ்வப்போது பெருமளவில் கிடைத்து வருகின்றன. 4 நாள்களுக்கு  மேல் தங்கி, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் போதிய மீன்கள் கிடைக்காமல் கரை திரும்பி வருவதாக தெரிவிக்கின்றனர்.  கருவாட்டுக்கும், மீன் எண்ணெய் உற்பத்திக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகும் மத்தி மீன்களுக்கும் போதிய விலை கிடைக்க வில்லை என்கிறார்கள்.
 
இது குறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், 
 
                       45 நாள் மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பின் கடலுக்குள் சென்று வரும் மீனவர்களுக்கு ஏமாற்றம்தான் காத்திருந்தது. ஏற்கெனவே கிடைத்து வந்த மீன்களில் 60 சதவீதம்தான் இப்போது கிடைக்கிறது. தற்போது 200 பெரிய படகுகள் மீன் பிடிக்கச் செல்கின்றன. அண்மையில் கணவாய் மீன்கள் 10 டன்கள் திடீரெனக் கிடைத்தன. இவை வேறுபகுதிகளில் இருந்து, கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணாக நமது பகுதிக்கு வந்தவை. கணவாய் மீன் வெளிநாடுகளுக்கு ஏற்றுதி செய்யப்படுகின்றன. உள்ளூரில் விரும்பிச் சாப்பிடுவதில்லை. ஆழ்கடல் பகுதிகளில் நார்வே, தைவான், ஜப்பான் போன்ற நாடுகளைச் சேர்ந்த மீன்பிடிக் கப்பல்கள் தொடர்ந்து மீன்பிடித்து வருகின்றன. அவர்களுக்குத் தடைக்காலம் எதுவும் இல்லை. இதனால் ஆழ்கடலில் உற்பத்தியாகிக் கரைநோக்கி வரும் மீன்கள் எதுவும் நமக்குக் கிடைப்பது இல்லை. வெளிநாட்டுக் கப்பல்கள் பிடித்துச் சென்றுவிடுகின்றன. கரையில் இருந்து குறைந்த தூரத்தில் கிடைக்கும் மீன்களும், ரசாயன ஆலைக் கழிவுகள் காரணமாகக் குறைந்து விட்டன. இந்த பருவத்தில் நிறைய மீன்கள் கிடைக்க வேண்டும். ஆனால் கிடைக்க வில்லை.÷இதனால் கொடுவா, வஞ்சரம், கணவாய் போன்ற மீன்கள், இறங்கு தளத்திலேயே கிலோ ரூ. 250-க்கு விற்கப்படுகிறது. மற்ற மீன்கள் கிலோ ரூ. 100 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்கி சந்தைகளில் விற்போர் மேலும் கூடுதல் விலை வைத்து விற்பார்கள். இதனால் மீன்கள் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்றார் சுப்புராயன். 
 
                    இந்நிலையில் ஏரிகள் குளங்களில் பிடிக்கப்படும் மீன்கள் வரத்து அதிகரித்து உள்ளன. கடலூர் நகரில் தெரு ஓரங்களில், ஏரி, குளங்களில் பிடிக்கப்படும் மீன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை கிலோ ரூ. 70 முதல் ரூ. 80 வரை உள்ளது.  கடல் மீன் விலை அதிகமாக இருப்பதால் பலர் ஏரி மீன்களை வாங்குகிறார்கள். கடல் மீன் வரத்து தொடர்ந்துகுறைவாக இருப்பதும், மீன்பிடி தடைக்காலத்தில் ஏறிய விலை இன்னமும் இறங்காமல் இருப்பதும், மீன் சாப்பிடுவோரை கவலையில் ஆழ்த்தி வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior