உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 25, 2010

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. கலந்தாய்வுக்கான பணிகள் விறுவிறுப்பு

               பி.இ. கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்களுக்கான மாணவர் உதவி மையம், கலந்தாய்வு மையம் என பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள், அண்ணா பல்கலைக்கழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் வகையில் சுமார் 15 வங்கிகள் தங்களது கவுன்ட்டர்களை அமைக்க உள்ளன.
                  முதல்கட்ட பி.இ. கவுன்சலிங் ஜூன் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் ஜூலை 5-ம் தேதி தொடங்குகிறது.   பி.இ. படிப்பில் சேருவதற்கு 1.67 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே பி.இ. கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் விளக்க அரங்கம், மாணவர் உதவி மையம், கலந்தாய்வு மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்கள், பெற்றோர்களுக்கு போதிய கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதி, கேன்டீன் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து பி.இ. மாணவர் சேர்க்கைக்கான செயலாளர் ரைமன்ட் உத்தரியராஜ் கூறியது:
               பி.இ. கலந்தாய்வுக்கான போதிய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் இப்பணிகள் முடிக்கப்படும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், கவுன்சலிங் விவரத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்க அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இங்கு 5 புரஜக்டர்கள் மூலம் கவுன்சலிங் விவரங்கள் உடனுக்குடன் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.கலந்தாய்வு மையத்தில் இந்த முறை 50 கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு 40 கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டன. முதல்கட்ட கலந்தாய்வில் நாளொன்றுக்கு 3,000 மாணவர்கள் வரை அழைக்கப்படுவர். இந்த எண்ணிக்கை, இரண்டாம் கட்ட கலந்தாய்வின்போது 6,000 பேராக அதிகரிக்கப்படும். கலந்தாய்வின்போது சான்றிதழ்களை சரிபார்க்க மட்டும் 25 கவுன்ட்டர்கள் அமைக்கப்படும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே வங்கி வரைவோலை எடுக்க போதிய வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினர் ரூ.5,000-க்கும், எஸ்.சி. எஸ்.சி.(ஏ), எஸ்.டி. மாணவர்கள் ரூ.1,000-க்கும் வங்கி வரவோலை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு எளிதாக கடனுதவி கிடைக்கும் வகையில், கல்விக் கடன் வழங்குவதற்காக சுமார் 15 வங்கிகள் தங்களது கவுன்ட்டர்களை அமைக்க உள்ளன. 
              அன்னிய நபர்களை அடையாளம் காணும் வகையில் அனுபவமிக்க 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், கலந்தாய்வு மையத்தில் 10 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணி நடைபெறும் என்றார் உத்தரியராஜ்.* முன்பின் தெரியாத அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
* கலந்தாய்வு மையத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரிடம் எந்தக் கல்லூரி சிறந்தது என்று கேட்கக் கூடாது. ஏனெனில் கம்ப்யூட்டரை இயக்க மட்டுமே அவருக்கு அனுபவம் உண்டு. அவருக்கு திருநெல்வேலியிலோ அல்லது கோவையிலோ உள்ள முக்கிய கல்லூரிகள் பற்றி தெரியவாய்ப்பில்லை. எனவே கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரிடம் எந்த அறிவுரையும் கேட்கக்கூடாது.
* கலந்தாய்வுக்கு வரும் மாணவருடன் ஒருவர் மட்டுமே வரலாம். ஆசிரியர்கள் உள்ளிட்டவரை அழைத்து வருதல் கூடாது.
* பல்கலைக்கழக வளாகத்தில், எந்தக் கல்லூரியும் தங்களது கல்லூரி தொடர்பான துண்டுபிரசுரங்களை மாணவர்களிடம் விநியோகித்து விளம்பரம் செய்யக்கூடாது என பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior