உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 25, 2010

செல்பேசியில் பொறியியல் பாடங்கள்: தேவையானதை தேர்வு செய்து பார்க்கலாம்; கேட்கலாம்

 
              பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ்களில் பல மணி நேரம் பயணம் செய்யும்போது செல்பேசியில் தேவையான பொறியியல் பாடங்களை தேர்வு செய்து, பார்க்கவும், கேட்கவும் கூடிய புதிய திட்டத்தை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தயார் செய்து வருகிறது.மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய இந்தத் திட்டம் 2011-ல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
                  சென்னை தரமணியில் உள்ளது தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனம். பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு, திறன் மேம்படுத்தும் பயிற்சிகளை இந்த நிறுவனம் அளித்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் பாடத்திட்டம் வரைதல், மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் முறைகள், மாணவர்களின் திறனாய்வு மதிப்பீடு செய்யும் முறை ஆகியவற்றையும் வடிவமைத்து வருகிறது. நிறுவனத்தின் வல்லுநர்கள் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த பயிற்சியின்போது மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்தவேண்டும், குறிப்பிட்ட பிரிவுகளில் என்னென்ன நவீன வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்தும் கற்றுத்தரப்படும்.இந்த பயிற்சிகளை வீடியோவாக பதிவு செய்தும், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும், பாலிடெக்னிக்குகளுக்கும் இந்த நிறுவனம் அளித்து வருகிறது. வெர்ட்சுவல் என்.ஐ.டி.டி.டி.ஆர்.: இந்த நிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஆன்-லைன் பயிற்சி மற்றும் வகுப்புகளை நடத்தக்கூடிய புதிய திட்டத்தை, தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இப்போது உருவாக்கி வருகிறது. ஐதராபாத்தில் உள்ள மத்திய அரசின் "சி-டாக்' நிறுவனம் வடிவமைத்து வருகிறது.
 
இதுகுறித்து சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ச. மோகன் கூறியது: 
 
                 ஆசிரியர்களுக்கான திறன் உயர்த்தும் பயிற்சிகளை, அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இலவசமாக அளித்து வருகிறோம். தனியார் கல்லூரிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். மிகுந்த பயனுள்ள இந்த பயிற்சி தங்களுடைய ஆசிரியர்களுக்கு அளிக்க, தனியார் கல்லூரிகள் அதிக அளவில் முன்வருவதில்லை. இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வி சென்றடைவது தடைபடுகிறது.இதைப் போக்கும் வகையில் நிறுவனத்தின் பயிற்சிகள் மற்றும் வீடியோ வகுப்புகளை ஆன்-லைனில் கொண்டு வரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிட்ட பாடங்கள் மற்றும் செய்முறை வகுப்புகளை மாணவர்களுக்கு எப்படி நடத்த வேண்டும் என்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி இடம்பெற்றிருக்கும். மேலும், கடினமான பாடங்களை தேர்வு செய்து, அதை சிறந்த ஆசிரியர் மூலம் நடத்தி வீடியோவில் பதிவு செய்யப்படும். இதுவும் ஆன்-லைனில் இணைக்கப்படும். இதன் மூலம், ஆசிரியர்களும், வகுப்புகளைத் தவற விடும் மாணவர்களும் தங்களுக்குத் தேவையான பாடங்களை இணைய தளம் மூலம் இலவசமாக பார்த்து பயனடைய முடியும். இந்தத் திட்டம் 2010 டிசம்பரில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
 
செல்பேசியில்... 
 
                       ஆன்-லைன் பயிற்சி திட்டம் நிறைவு பெற்றவுடன், அடுத்த கட்டமாக அந்த பயிற்சிகளையும், வீடியோ வகுப்புகளையும் செல்பேசியில் பார்க்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது. செயற்கைக்கோள் மூலம் செயல்படக்கூடிய இந்தத் திட்டத்தை 2011-ல் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர்கள், வீட்டிலிருந்து கல்லூரிக்குச் செல்ல தினமும் 4 மணி நேரத்துக்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த பயண நேரத்தை மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இணையதள வசதியுடைய செல்பேசி வைத்திருப்பவர்கள், இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். ஒரு முறை பதிவு செய்துவிட்டு, எப்.எம். ரேடியோவில் நிலையங்களை தேர்வு செய்வதுபோல், தேவையான பாடங்களை தேர்வு செய்து பார்க்கவும், வீடியோ வகுப்புகளை கவனிக்கவும் முடியும். வகுப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பஸ்ஸிலுள்ள மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காத வகையிலும் பாடங்களை கேட்க முடியும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior