நெய்வேலி:
என்.எல்.சி.,யில் பணி நிரந்தரப்படுத்துதல் தொடர்பாக 7,500 ஒப்பந்த தொழிலாளர்கள் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. என்.எல்.சி., நிறுவனத்தில் 11 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர் கள் பணிபுரிகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மருத்துவம், குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள் கோரி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக கடந்த 2008ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி டில்லியில் அப்போதைய மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் சந்தோஷ் பக்ரோடியா, ஏ.ஐ.டி.யு.சி., அகில இந்திய பொதுச் செயலர் குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் போடப் பட்டது.
இதைத் தொடர்ந்து, ஒப்பந்த தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வு மற்றும் மருத்துவ வசதிக்கான மருத்துவ புத்தகம் வழங்கப்பட்டது. மேலும், தொழிலாளர்கள் நிரந்தரம் செய்வதற்கான முயற்சிகளை என்.எல்.சி., மேற்கொண்டது. ஆனால், இது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றதால் நடவடிக்கைகள் முடங்கியது. இதையடுத்து, ஒப்பந்த தொழிலாளர்கள் மீண்டும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த மே மாதம் 30ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி நள்ளிரவு வரை என்.எல். சி., நிரந்தர தொழிலாளர்கள் நடத்திய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.
இதனால், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி மற்றும் மின் உற்பத்தியில் பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் எதிரொலியாக, என்.எல்.சி., சேர்மன் அன்சாரியின் உத்தரவின் பேரில் பணி நிரந்தரப்படுத்துதல் தொடர்பாக 7,500 ஒப்பந்த தொழிலாளர்கள் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதுகுறித்து, ஏ.ஐ.டி.யு.சி., பொதுச் செயலர் குப்புசாமி கூறுகையில்,
"என்.எல்.சி., சேர்மன் அன்சாரியின் இந்த நடவடிக் கையை மனதார வரவேற்கிறோம். அதுபோலவே ஊதிய உயர்வு கோரிக்கைகளையும் விரைவில் நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும்' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக