உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்: கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

நெய்வேலி:

                பள்ளிகளில் உள்ள துறைகளில் உடற்கல்வித் துறைதான் மிகவும் ஒழுங்கீனமாக உள்ளது என கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறினார்.

                கடலூர் வருவாய் மாவட்ட மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம், கடலூர் கல்வி மாவட்ட கலைக் கழகப் பொதுக்குழுக் கூட்டம்,  மாவட்ட உடற்றிறக் கழகப் பொதுக்கூட்டம் என முப்பெரும் கூட்டம் நெய்வேலி என்எல்சி பயிற்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பங்கேற்ற கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவள்ளி  பேசியது. 

                மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய உடற்கல்வி ஆசிரியர்களின் செயல்பாடுகள் ஒழுங்கீனமாக உள்ளன. பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் அதற்குரியவராக தகுதியுடன் இருக்கத் தவறுகின்றனர். முன்பெல்லாம் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் விசில் அடித்தால் பள்ளியே நிசப்தமாக ஆகிவிடுவதோடு, மாணவர்கள் வகுப்பறைக்குள் இருந்து தலையை வெளியே நீட்டவே அச்சப்படுவர். ஆனால், தற்போது அதுபோன்ற நிலை உள்ளதா என்றால் கேள்விக்குறிதான் மிச்சம்.

              உடற்கல்வி ஆசிரியர்களிடையே போட்டிகள் இருக்கலாம். ஆனால் பொறாமை கூடாது. என் முன்னரே ஒருவரை ஒருவர் காழ்ப்புணர்ச்சியோடு பேசிக்கொண்டால், விளையாட்டரங்கில் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்வீர்கள். இதுபோன்று நீங்கள் நடந்துகொண்டால் மாணவர்களை நீங்கள் எப்படி கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கமுடியும். எனவே மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் என்றார் அமுதவள்ளி. இக்கூட்டத்தின் போது 2010-2011-ம் ஆண்டின் உடற்றிறக் கழக பொதுமையமாக கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டது. குறுவட்ட மையங்களாக வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (கடலூர்), அரசு மேல்நிலைப்பள்ளி (காடாம்புலியூர்), எஸ்கேவி மேல்நிலைப்பள்ளி (குறிஞ்சிப்பாடி), திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி (ஓரத்தூர்). தலைமையாசிரியர்கள் சேதுராமன் (சிறுகிராமம்), தர்பாரண்யன் (சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி (அண்ணாமலை நகர்),  உடற்கல்வி இயக்குநர்கள் பிரபாகர், ஜோதிப்ரியா, சாமிக்கண்ணு, உடற்கல்வி ஆசிரியர்கள் பி.அருள்செல்வன், டி.ராஜேந்திரன், சுப்ரமணியன், டி.முடியழகன், காந்திமதி உள்ளிட்டோர் குறுவட்ட மையத்தின் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை என்எல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியை ஆர்.எஸ்.மணிமொழி செய்திருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior