உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் பயிரைக் காப்பாற்ற மேட்டூர் அணையை திறக்கக் கோரிக்கை

 


கடலூர்:

              டெல்டா மாவட்டங்களில் தற்போது பயிரிடப்பட்டு இருக்கும் குறுவை நெல் பயிரைக் காப்பாற்றவும் சம்பா நாற்றங்கால் பணிகளை முன்னரே தொடங்கவும் வசதியாக, மேட்டூர் அணையைப் பாசனத்துக்குத் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் தமிழக அரசுக்கு வெள்ளிக்கிழமை விடுத்த கோரிக்கை:

               தமிழகத்தில் 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இவை பெரும்பாலும் ஆழ்குழாய்க் கிணறுகளையும், தென்மேற்குப் பருவ மழையையும் நம்பியே உள்ளன. டெல்டா நிலங்களில் ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீப் பெரும்பாலும் உவர் நீராக மாறிவருகிறது. இதனால் குறுவை நெல் வளர்ச்சி செழிப்பாக இல்லை. தென்மேற்குப் பருவ மழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. 

              எனவே காய்ந்து கொண்டு இருக்கும் குறுவை நெல்பயிரைக் காப்பாற்றவும், சம்பா சாகுபடிப் பணிகளை முன்னரே தொடங்கவும், விவசாயிகள் விரும்புகிறார்கள். எனவே இப்போதே மேட்டூர் அணையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் திறக்கலாம். கடந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதே நேரத்தில் வடகிழக்குப் பருவமழையும் தொடங்கிவிட்டது. இதனால் மழைநீரும் காவிரி நீரும் பெருளவுக்கு வீணாகக் கடலில் கலந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 4 முறைதான் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டு இருக்கிறது. காலம் கடந்து திறக்கும் போதெல்லாம் வடகிழக்கு பருவ மழையின் பாதிப்புகளை விவசாயிகள் சந்திக்க நேரிட்டது. தற்போது மேட்டூர் அணையில் கணிசமான அளவுக்குத் தண்ணீர் உள்ளது. தென்மேற்குப் பருவமழை கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்து வருகிறது. கர்நாடக மாநில அணைகள் நிரம்பி வருகின்றன.

            எனவே இப்போதே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் விடுவிக்கப்பட்டால், குறுவை நெல் பயிரை நூறு சதவீதம் காப்பாற்ற முடியும், சம்பா பயிரை வடகிழக்குப் பருவ மழையின் தாக்குதலில் இருந்தும் காப்பாற்ற முடியும்.  காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்துக்கு சட்டப்படி கர்நாடகம் வழங்க வேண்டிய காவிரி நீரைப் பெறுவதில், தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை. பருவ நிலைகள் பெரிதும் மாறிவருகின்றன. அதற்கு ஏற்ப டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணை நீரை விடுவிப்பதிலும், அதிகாரிகள் விவசாயிகளின் கருத்தைக் கேட்டறிந்து புதிய அணுகு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார் ரவீந்திரன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior