உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 12, 2010

சமூக தணிக்கை குழுக்களுக்கு ஆவணங்கள் வழங்காததால் 15ல் கிராம சபா கூட்டங்கள் நடப்பதில் சிக்கல்

கடலூர்: 

           தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சமூக தணிக்கை குழுவிற்கு, திட்டங்கள் குறித்த ஆவணங்கள் வழங்கப்படாததால், வரும் 15ம் தேதி நடக்கும் கிராம சபா கூட்டம், பெயரளவிலேயே நடக்கும் நிலை உள்ளது. 

            கிராம மக்களுக்கு வேலை அளிக்கும் பொருட்டு மத்திய அரசு செயல்படுத்தும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் முறைகேடுகளை தவிர்க்க, மத்திய அரசு, 2008, டிசம்பர் 31ம் தேதி சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அதில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களை மக்களுக்கு தெரிவிக்கவும், செயல்படுத்தப்படும் திட்டங்களை சமூக தணிக்கை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த, 2009ம் ஆண்டு ஜூனில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அறிவிப்பை வெளியிட்டது. அதன் அடிப்படையில் இத்திட்ட செயல்பாடுகள் குறித்து சமூக தணிக்கை செய்வதற்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஒன்பது பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. 

              இக்குழுவினர் தொழிலாளர் பதிவுப் பட்டியல், வருகைப் பதிவேடு, ஊராட்சி மன்ற தீர்மானம், ஊராட்சியால் தேர்வு செய்த வேலைகளின் தொகுப்பு, பணி மேற்கொள்வதற்கான நிர்வாகம் மற்றும் தொழில் நுட்ப அனுமதி, ஊதியம் விடுவிப்பு ஆணை, இத்திட்டத்திற்கான வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் பணி முடிப்பு சான்றுகளை ஆய்வு செய்து கிராம சபா கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்து, அதன் மீது விவாதித்து நடைமுறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இதற்கான ஆவணங்களை கிராம சபா கூட்டம் நடப்பதற்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்னதாக சமூக தணிக்கைக் குழுவிற்கு வழங்க ஊரக வளர்ச்சித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி வரும் 15ம் தேதி தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டங்கள் நடக்க உள்ளன. 

                இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள், ஊராட்சிகளில் மேற்கொண்ட பணிகள், வேலை செய்த தொழிலாளர்களின் விவரம், அவர்களின் வருகைப் பதிவேடு, சம்பளம் வழங்கிய விவரம், பணியின் நிலை குறித்த விவரங்கள் சமூக தணிக்கை குழுவிற்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக வரும் 15ம் தேதி கிராம சபா கூட்டம் பெயரளவிலேயே நடக்கும் நிலை உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior