அரசின் கடும் எச்சரிக்கையையும் மீறி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் திறந்து, போராட்டத்தை முறியடித்தனர்.
டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தது. அரசின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, 11ம் தேதி (நேற்று) ஒரு நாள் மட்டும் கடையடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையும் முறியடிக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகத்தினர், "போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்' என ஊழியர்களிடம் கடந்த 9ம் தேதி எழுதி வாங்கியதோடு, கடைகளின் ஒரு சாவியை வாங்கிக் கொண்டனர்.
மேலும் 10 மற் றும் 11ம் தேதிகளில் "ஷிப்ட்' முறை கிடையாது. கடைகளுக்கு நியமிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும். இரண்டு நாட்களிலும் வசூல் பணத்தை வங்கியில் செலுத்தக் கூடாது. கடைக்கு நேரடியாக வரும் மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
போராட்டத்தன்று அனைத்து கடைகளையும் திறக்க வசதியாக 15 முதல் 20 கடைகளை கண்காணித்திட வருவாய்த் துறை, டாஸ்மாக் அலுவலக ஊழியர் மற்றும் ஒரு போலீசார் கொண்ட குழு அமைக்கப்பட் டது. இக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று அன் றைய வசூல் பணத்தை பெற் றுக் கொண்டு, சரக்கு இருப்பு விவரங்களை கணக்கெடுத்துக் கொண்டு கடைகளைப் பூட்டி சீல் வைத்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தடை விதித்து ஐகோர்ட் நேற்று முன்தினம் உத்தரவிட்டதால், டாஸ்மாக் ஊழியர்கள் பெரும் பாலானோர் நேற்று காலை பணிக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 231, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 284 டாஸ்மாக் கடைகளில் நேற்று காலை 10.30 மணிக்கு ஓரிரு கடைகள் மட்டுமே திறந்திருந்தன.ஆளும் கட்சியின் ஆதரவு சங்கமான தொ.மு.ச., உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த விற்பனையாளர்களைக் கொண்டு கடைகளைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனால் பகல் ஒரு மணி அளவில் 70 சதவீத கடைகள் திறந்திருந்தன. இந்தக் கடைகளில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பிரச்னை செய்யாமல் இருக்கும் பொருட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரப் பகுதிகளில் உள்ள கடைகள் பெரும்பாலும் திறந் திருந்த போதிலும், கிராமப் பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்ததால் குடிப்பிரியர்கள் பெருத்த ஏமாற்றத் திற்கு உள்ளாகினர்.
இதுகுறித்து மாவட்ட மேலாளர்கள் கடலூர் தேவராஜூ, விழுப்புரம் சுந்தரேசன் கூறுகையில்,
"மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பகல் ஒரு மணி அளவில் அனைத்து கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளது. விற்பனையில் பாதிப்பில்லை' என்றனர்.
உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பு:
அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், பிற சங்கங்கள் நேற்று அறிவித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்திருந்ததோடு, அதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். அதனால் பணியாளர் சங்கத்தினர் கடையடைப் புப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
குடி பிரியர்கள் "உஷார்'"
கடலூர் மாவட்டத்தில் உள்ள 231 டாஸ்மாக் கடைகளில் தினசரி சராசரியாக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 284 கடைகளில் ஒரு கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகும். டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்ததால், உஷாரான குடி பிரியர்கள் முதல் நாளே தங்களுக்குத் தேவையான சரக்குகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட 10 லட்சம் ரூபாயும், விழுப்புரம் மாவட்டத்தில் 8 லட்சம் ரூபாயக்கும் கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
புதுச்சேரியில் விற்பனை படுஜோர்
தமிழகத்தில்"டாஸ்மாக்' ஊழியர்கள் நேற்று கடைகளை அடைத்து "ஸ்டிரைக்' நடத்தியதால் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த குடிப் பிரியர்கள் புதுச்சேரிக்கு படையெடுத்தனர். புதுச்சேரியில் உள்ள மதுக் கடைகளில் நேற்று வியாபாரம் களை கட்டியது. குறிப்பாக புதுச்சேரி- தமிழக எல்லையோரம் உள்ள மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது. மதுபானக் கடைகளில் மட்டுமல்லாமல், புதுச்சேரியின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள கள்ளு, சாராயக் கடைகளிலும் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக