சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நந்தன் நுழைந்த தெற்குவாயிலை திறக்கக் கோரி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டத்துக்கு தடையை மீறி பேரணியாக சென்ற 2 எம்எல்ஏக்கள், 135 பெண்கள் உள்ளிட்ட 1144 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
முன்னதாக வடக்குமெயின்ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்து அவர் பேசியது:
நந்தன் சென்ற வழியில் செல்ல நூறு மடங்கு ஆசையுடன் வந்துள்ளோம். ஆனால் 5 ஆண்டுகளாக ஆளுகிறவர்கள் இதை தடுக்கலாமா? கோயிலில் கொள்ளையடிக்க சென்றால் சட்டவிரோதமாகும். கோயிலை பார்க்க, தரிசனம் செய்ய 2010-ம் ஆண்டில் செல்வதை உச்ச நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி தடுப்பது சரியல்ல. துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் நீதிமன்ற வழக்கு குறித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.
அதற்கு அனுமதி உண்டு, கடனில் வாழும் விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் செய்தால் ஏன் தடுக்கப்படுகிறது? நடராஜர் கோயிலில் தடை செய்யப்பட்ட சுவரை அரசு நீக்க வேண்டும். இது 4 ஆயிரம் ஆண்டு அவமான சின்னம், நந்தன் நுழைந்த தெற்குவாயிலை திறக்கும் வரை அடுக்கடுக்காக போராட்டங்களை நடத்துவோம். அதுபோன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் அரசு சார்பில் ஆகமவிதிப்படி பயிற்சி முடித்த அர்ச்சகர்களை இடஒதுக்கீடு அடிப்படையில் கோயில்களில் பூசாரிகளாக நியமிக்க வேண்டும் என தா.பாண்டியன் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக